திருவண்ணாமலை
குளவிகள் கொட்டியதில் விவசாயி சாவு
|ஆரணி அருகே குளவிகள் கொட்டியதில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.
ஆரணி
ஆரணி அருகே பூசிமலைக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட மூலத்தாங்கல், கொள்ளைமேடு பகுதிகளை சேர்ந்தவர்கள் நேற்று காலை விவசாய வேலைக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்த குளவி கூடு திடீரென கலைந்து அந்த வழியாகச் சென்றவர்களை குளவிகள் கொட்டின.
இதில் மூலத்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை (வயது 60), விவசாயி மற்றும் பூசிமலைக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரும், முன்னாள் ராணுவ வீரரான தங்கராஜ் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக அனைவரும் முள்ளண்டிரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதில் ஏழுமலைக்கு வலி அதிகமாக இருந்தது.
அதனால் அவர் கண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கிருந்து இன்று வீடு திரும்பிய நிலையில் இரவு 9 மணி அளவில் பரிதாபமாக இறந்தார் .
இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி தங்கராஜ் ஆரணி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து குளவி கூட்டை அழித்தனர்.