திருவள்ளூர்
வாகனம் மோதி விவசாயி பலி - கோவிலுக்கு நடந்து சென்றபோது பரிதாபம்
|ஊத்துக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலியானார். நேர்த்தி கடன் செலுத்த பெரியபாளையம் கோவிலுக்கு நடந்து சென்றபோது இந்த பரிதாபம் நடைபெற்றது.
ஊத்துக்கோட்டை,
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள மேல் சிற்றப்பாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 75). விவசாயக் கூலி வேலை செய்து வந்தார். ஆடி மாதத்தையொட்டி பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோவிலில் திருவிழா தொடங்கியுள்ளது.
அம்மன் பக்தரான ராஜகோபால் ஒவ்வொரு வருடமும் பெரியபாளையம் கோவிலுக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். அதன் பேரில் அவர் நேற்று ஊத்துக்கோட்டை அருகே உள்ள தோபம்பரம் மேடுபகுதியில் சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ராஜகோபால் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து சாலையோரம் முதியவர் இறந்து கிடப்பதாக அந்த வழியாக வந்தவர்கள் ஊத்துக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் ராஜகோபாலின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் ஊத்துக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து முதியவர் மீது மோதி விட்டு தப்பி சென்றவரை தேடி வருகின்றார். பெரியபாளையம் கோவிலுக்கு நேர்த்தி கடன் செலுத்த நடந்து சென்றபோது முதியவர் விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.