நாமக்கல்
கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு
|பரமத்திவேலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பரிதாபமாக இறந்தார்.
பரமத்திவேலூர்
பரமத்தி வேலூர் தாலுகா, சின்னக்கரசப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 60). விவசாயி. இவர் அடிக்கடி மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இரவு வரை அவர் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிவிட்டு தோட்டத்திற்கு அருகே கிணற்று பக்கத்திற்கு சென்று தேடியுள்ளனர். அப்போது கிணற்றில் பாலசுப்ரமணியனின் செருப்பு தண்ணீரில் மிதந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து கிணற்றுக்குள் மூழ்கிய பாலசுப்ரமணியனின் உடலை மீட்டனர்.
இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.