< Back
மாநில செய்திகள்
விவசாயி தலை துண்டித்து கொலை
திருநெல்வேலி
மாநில செய்திகள்

விவசாயி தலை துண்டித்து கொலை

தினத்தந்தி
|
29 Aug 2023 1:23 AM IST

நெல்லை அருகே பழிக்குப்பழியாக விவசாயி தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி சந்தனமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகன் கணேசன் (வயது 38), விவசாயி. இவர் தற்போது நெல்லை அருகே உள்ள தருவை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கணேசன் நேற்று நெல்லைக்கு வந்துவிட்டு, மாலை சுமார் 6 மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். தருவை பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது, ஒரு மர்ம கும்பல் மோட்டார் சைக்கிளை வழிமறித்து தகராறு செய்தது.

அந்த கும்பலை சேர்ந்தவர்கள் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் கணேசனின் தலையை வெட்டி துண்டித்தனர். கைகள் இரண்டையும் வெட்டி துண்டித்தார்கள். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது முகத்தை சிதைத்து உடல் மற்றும் தலை, கைகளை சாலையோரம் உள்ள வயல் பகுதியில் வீசிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து உடனடியாக முன்னீர்பள்ளம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், இன்ஸ்பெக்டர் இன்னோஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கணேசனின் உடல், தலை, கைகளை கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி அறிந்த கணேசன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் திரண்டனர். அவரது உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் சேரன்மாதேவி சந்தனமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மாரியம்மாள் (56) என்பவர் கடந்த 24-8-2022 அன்று கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கணேசனை போலீசார் கைது செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணேசன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். நேற்று உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக தருவையில் இருந்து நெல்லைக்கு வந்தார். பின்னர் ஊருக்கு திரும்பிய போது மர்ம கும்பல் வழிமறித்து கணேசனை பழிக்குப்பழியாக ெவட்டி படுகொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

எனினும் கொலைக்கு இதுதான் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. இந்த கொடூரக்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், 2 தனிப்படைகள் அமைத்து தப்பி ஓடிய மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள். நெல்லை அருகே பழிக்குப்பழியாக விவசாயி தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்