திருவள்ளூர்
மீஞ்சூர் அருகே விவசாயி அடித்துக்கொலை - 3 பேர் கைது
|மீஞ்சூர் அருகே விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மீஞ்சூர் அருகே உள்ள காட்டூர் வன்னியர் தெருவை சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 55). விவசாயி. இவருக்கு திவ்யா (32) என்ற மகள் உள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரை காதலித்து வந்தது ஜீவானந்தனுக்கு தெரியவந்தது. அவருக்கு தன்னுடைய மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்துவிட்டார்.
அதே கிராமத்தை சேர்ந்த யுவராஜ் என்பவருக்கு திவ்யாவை கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் செய்து கொடுத்தார். இதனால் கண்ணனுக்கும் ஜீவானந்தத்துக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் யுவராஜ் மனைவி வீட்டுக்கு வரும் போதெல்லாம் கண்ணன் யுவராஜை திட்டுவதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மனைவி வீட்டிற்கு வந்த யுவராஜை கண்ணன் வழிமறித்தார். இதனால் இருவரும் ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கி கொண்டனர். இதனை அறிந்த ஜீவானந்தம் மற்றும் அவரது உறவினர்கள் கண்ணன் வீட்டுக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கண்ணனின் உறவினர் முத்து அருகே இருந்த கட்டையை எடுத்து ஜீவானந்தத்தை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த ஜீவானந்தம் பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து காட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து காட்டூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த முத்து (29), ஆதிகேசவ பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த நித்தியானந்தம் (36), ராஜேஷ்குமார் (36) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.