20 ரூபாய் கடன் தகராறில் விவசாயி அடித்துக்கொலை
|ஏசுதாஸ் சில மாதங்களுக்கு முன் ஓட்டலில் சாப்பிட்டு ரூ.20 கடன் வைத்ததாக கூறப்படுகிறது.
திருச்சி,
திருச்சி மாவட்டம் கொன்னக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஏசுதாஸ் (வயது 58). விவசாயி. அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருபவர் ஜோசப்ராஜ். இவரது ஓட்டலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏசுதாஸ் டிபன் சாப்பிட்டு விட்டு ரூ.20 கடன் சொல்லியதாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி இரவு ஓட்டல் வழியாக ஏசுதாஸ் சென்றார். இதைபார்த்த ஜோசப் ராஜ், அவரது மனைவி ஆரோக்கிய மேரி ஆகியோர் ஏசுதாசை வழி மறித்து நீ ஓட்டலில் சாப்பிட்ட பாக்கி ரூ.20-ஐ கொடுத்து விட்டு செல்லுமாறு கூறினர். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஜோசப்ராஜ் மூங்கில் கம்பால் ஏசுதாசை தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஏசுதாஸ் நேற்று காலை சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதுகுறித்து லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோசப்ராஜ், அவரது மனைவி ஆரோக்கியமேரியை வலைவீசி தேடி வருகின்றனர்.