தர்மபுரி
குடும்ப சண்டையை தடுக்க வந்தவரை அரிவாளால் வெட்டிய விவசாயி கைது
|ஏரியூர் அருகே குடும்ப சண்டையை தடுக்க வந்தவரை அரிவாளால் வெட்டிய விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
ஏரியூர்
குடும்ப சண்டை
ஏரியூர் அருகே உள்ள கொம்பாடியூர் பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 36), விவசாயி. இவருடைய மனைவி பரிமளா. நேற்று முன்தினம் இரவு குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது சத்யராஜ், தனது மனைவியை தாக்க முயன்றார்.
இந்த சண்டையை சத்யராஜின் தந்தை பொன்னப்பன், தாயார் சுந்தரி ஆகியோர் விலக்க முற்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த சத்யராஜ், தனது தந்தையை, கையில் வைத்திருந்த அரிவாளால் வெட்ட முயன்றார்.
இதில் பயந்து போன பொன்னப்பன் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்துள்ளார். அப்போது பக்கத்து வீட்டில் வசிப்பவரும், கரும்பு ஆலை வைத்து வெல்லம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருபவருமான தங்கராஜ் (62) என்பவர் சத்யராஜை தடுத்துள்ளார்.
அரிவாள் வெட்டு
இருப்பினும் கட்டுப்பாட்டை இழந்த சத்யராஜ், சண்டையை தடுத்த தங்கராஜின் மார்பு, கை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் தான் வைத்திருந்த அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த தங்கராஜ், பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பெரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சத்யராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்ப பிரச்சினையில் ஏற்பட்ட சண்டையை தடுக்க சென்றவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் கொம்பாடியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.