விருதுநகர்
விவசாய பணிகள் மும்முரம்
|வத்திராயிருப்பு பகுதிகளில் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
வத்திராயிருப்பு, கூமாபட்டி, கிழவன் கோவில், பிளவக்கல், ரஹ்மத் நகர், சுந்தரபாண்டியம், தம்பி பட்டி, கோட்டையூர், இலந்தைகுளம், மகாராஜபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் முதல் போக நெல் நடவு பணிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.
தற்போது நெல் நடவு செய்து ஒரு மாதம் ஆன நிலையில் பயிர்களுக்கு இடையில் வளர்ந்துள்ள களைகளை எடுக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியில் உள்ள விவசாயிகள் கூறியதாவது:-
வத்திராயி்ருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகி்ன்றனர். இங்கு விவசாயம் செழிப்பாக நடைபெற கிணற்று பாசனம் கை கொடுத்தாலும், பிளவக் கல், பெரியாறு அணையின் மூலம் பெரும்பாலான விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை பிளவக்கல் அணையில் குறைவான அளவு தான் தண்ணீர் இருந்தது. இதையடுத்து தற்போது போது தொடர்மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் சற்று உயர்ந்தது. வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் தற்போது பெய்த மழையின் காரணமாக நன்கு பசுமையாக வளர்ந்துள்ளது.
ஆதலால் இங்குள்ள விவசாயிகள் களை எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்து பயிர்கள் நன்கு வளர்ந்து நல்ல மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.
விவசாயிகளுக்கு தேவையான உரங்களை தட்டுப்பாடின்றி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.