< Back
மாநில செய்திகள்
பாச தலைவனை காண தேமுதிக அலுவலகத்தை நோக்கி அலை அலையாய் திரளும் ரசிகர்கள், தொண்டர்கள்...!
மாநில செய்திகள்

பாச தலைவனை காண தேமுதிக அலுவலகத்தை நோக்கி அலை அலையாய் திரளும் ரசிகர்கள், தொண்டர்கள்...!

தினத்தந்தி
|
28 Dec 2023 4:43 PM IST

கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தை சுற்றிலும் எங்கும் மக்கள் தலைகளாகவே காட்சியளிக்கின்றன.

சென்னை,

ஒரு மனிதன் தான் வாழ்ந்த காலத்தில் என்ன செய்தார் என்பதை அவருடைய இறப்பிற்கு வந்த கூட்டம்தான் சொல்லும். பொது வாழ்வில் இருந்த அந்த மனிதர் எப்படியெல்லாம் மக்களின் மனதை வென்றுள்ளார் என்பதும் தெரியும்.

இது நிறைய அரசியல் கட்சியினர், பிரபலங்கள் இறப்பில் நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம். அந்தவகையில், கலியுக கர்ணன்,கொடை வள்ளல், அன்னதான பிரபு என ரசிகர்களால், தொண்டர்களால் அன்போடு அழைக்கப்பட்ட விஜயகாந்த் இன்று காலை நுரையீரல் அழற்சி காரணமாக காலமானார். இந்த செய்தியை அறிந்த தேமுதிக தொண்டர்கள் கதறி அழுகிறார்கள். இதையடுத்து கட்சி அலுவலகம் முன்பு அவர்கள் கூடிவருகின்றனர். மியாட் மருத்துவமனையில் இருந்து விஜயகாந்தின் உடல் காலை 10 மணிக்கு கட்சி அலுவலகத்திற்கு புறப்பட்டது. வழிநெடுகிலும் மக்கள் அஞ்சலி செலுத்திய நிலையில் 4 கி.மீ., தூரத்தை கடக்க 4 மணி நேரம் ஆனது.

கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தை சுற்றிலும் எங்கும் மக்கள் தலைகளாகவே காட்சியளிக்கின்றன. மேம்பாலத்திற்கு மேல் மக்கள் தலைகளாக உள்ளன. கீழேவும் இப்படித்தான் கடல் அலை போல் மக்கள் திரண்டுள்ளார்கள்.

கட்சி அலுவலகத்திற்கு அஞ்சலி செலுத்த தொண்டர்கள் வந்து கொண்டிருப்பதால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. விஜயகாந்த் அண்மைக்காலமாக கட்சி பணிகளில் ஈடுபடவில்லை, படங்களில் கூட நடிக்கவில்லை. இத்தனை ஆண்டுகளாக எந்த பேட்டியும் கொடுக்கவில்லை. ஆனால் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இப்படி ஒரு பாச தலைவனுக்காக அவர்கள் கூடியிருக்கிறார்கள். இதுதான் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் அடையாளம் என்றே சொல்லலாம்.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலை காண லட்சக்கணக்கான மக்கள் கூடியுள்ளதை பார்க்கும் போது இதுதான் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் அடையாளம் என்பது நிரூபணமாகிறது.

மறைந்த விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகம் முன்பு லட்சக்கணக்கான மக்கள் கூடி வருவதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

மேலும் செய்திகள்