< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் விபத்து வழக்கில் பிரபல யூடியூபர் டி.டி.எப். வாசனுக்கு 16-ந் தேதி வரை காவல் - காஞ்சீபுரம் கோர்ட்டு உத்தரவு
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்து வழக்கில் பிரபல யூடியூபர் டி.டி.எப். வாசனுக்கு 16-ந் தேதி வரை காவல் - காஞ்சீபுரம் கோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
4 Oct 2023 12:21 PM IST

மோட்டார் சைக்கிள் விபத்து வழக்கில் பிரபல யூடியூபர் டி.டி.எப். வாசனுக்கு 16-ந்தேதி வரை காவல் விதித்து காஞ்சீபுரம் கோர்ட்டு உத்தரவிட்டது.

காஞ்சீபுரம் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தாமல் பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்து ஏற்படுத்தி தனக்குத்தானே காயம் ஏற்படுத்தி கொண்ட வழக்கில் பிரபல யூடியூபர் டி.டி.எப். வாசன் எனும் வைகுண்ட வாசன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடந்த 19-ந்தேதி பாலுச்செட்டி சத்திரம் போலீசார் கைது செய்து காஞ்சீபுரம் நீதித்துறை நடுவர் கோர்ட்டு எண் 1-ல் ஆஜர் படுத்தி தொடர்ந்து நீதிபதி உத்தரவின் பேரில் நேற்று வரை கோர்ட்டு காவலில் வைக்கப்பட்டார்.

புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் டி.டி.எப். வாசன் கையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டி.டி.எப். வாசனுக்கு கோர்ட்டு காவல் நேற்று முடிவடையும் நிலையில் ஏற்கனவே காஞ்சீபுரம் மாவட்ட அமர்வு கோர்ட்டு எண் 2-ல் 3 முறை ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று 4-வது முறையாக பிரபல யூடியூபர் டி.டி.எப். வாசனுக்கு ஜாமீன் கேட்டு காஞ்சீபுரம் மாவட்ட அமர்வு கோர்ட்டில் டி.டி.எப். வாசனுடைய வக்கீல் மனு செய்திருந்தார்.

காஞ்சீபுரம் நீதித்துறை நடுவர் கோர்ட்டு எண் 1-ல் டி.டி.எப். வாசனை போலீசார் ஆஜர் படுத்த வேண்டிய நிலையில், காணொலி காட்சி மூலமாக டி.டி.எப். வாசனை பாலுசெட்டி சத்திரம் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள்.

இதனைத் தொடர்ந்து விபத்து ஏற்படுத்திய வழக்கில் யூடியூபர் டி.டி.எப். வாசனுக்கு வருகிற 16-ந் தேதி வரை 14 நாட்களுக்கு கோர்ட்டு காவலை நீட்டித்து காஞ்சீபுரம் நீதித்துறை நடுவர் கோர்ட்டு எண்- 1 நீதிபதி இனிய கருணாகரன் உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில், காஞ்சீபுரம் மாவட்ட அமர்வு கோர்ட்டில் ஜாமீன் மனு தொடர்ந்து நிராகரிக்கப்படுவதால் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு செய்ய டி.டி.எப். வாசன் தரப்பினர் முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், காஞ்சீபுரம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை வக்கீல்கள் வாபஸ் பெற்று கொண்டனர்.

மேலும் செய்திகள்