திருவள்ளூர்
ஸ்ரீபெரும்புதூரில் வெடிகுண்டு வீசி பிரபல ரவுடி கொலை
|ஸ்ரீபெரும்புதூரில் வெடிகுண்டு வீசி பிரபல ரவுடி கொலை செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பகுதியை சேர்ந்தவர் எபினேசர் (வயது 32). பிரபல ரவுடியான இவர் மீது 2020-ம் ஆண்டு திருமழிசை பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவரை கொலை செய்த வழக்கு, கொலை மிரட்டல், அடிதடி, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் உள்ளார்.
இந்த நிலையில் நேற்று ஸ்ரீபெரும்புதூர்-அரக்கோணம் சாலையில் எபினேசர் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். ஸ்ரீபெரும்புதூர் அருகே மண்ணூர் என்னும் இடத்தில் ஆட்டோ வந்தபோது மர்ம நபர்கள் சிலர் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆட்டோ மீது நாட்டு வெடிகுண்டை வீசினர்.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த எபினேசர் தப்பி அருகே வயல்வெளியில் ஓடினார். ஆட்டோவை ஓட்டி வந்தவர் ஆட்டோவுடன் தப்பிச்சென்று விட்டார்.
அந்த மர்ம கும்பல் விரட்டி சென்று எபினேசரை அரிவாளால் சரமாரியாக தலையில் வெட்டினர். இதில் எபினேசர் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அங்கிருந்து மர்மகும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றது.
இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எபினேசர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? பழிக்கு பழியா? அல்லது தொழில் போட்டியா? என பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வெடிகுண்டு வீசி கொலை செய்யும் கலாசாரம் ஸ்ரீபெரும்புதூரில் சமீபகாலமாக பரவி வருகிறது. இதற்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூர் தொழில் அதிபர் பி.பி..ஜி குமரன், பா.ஜ.க. பிரமுகர் பி.பி.ஜி.டி. சங்கர், கடந்த மாதம் தி.மு.க. பிரமுகர் ஆல்பர்ட் ஆகியோர் வெடிகுண்டு வீசி வெட்டிக்கொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.