சிவகங்கை
பெண்களுக்கான குடும்ப நல விழிப்புணர்வு முகாம்
|பெண்களுக்கான குடும்ப நல விழிப்புணர்வு முகாம் கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் நடந்தது
திருப்பத்தூர்
பெண்களுக்கான சிறப்பு குடும்ப நல விழிப்புணர்வு முகாம் சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் நடந்தது.
உலக மக்கள் தொகை விழிப்புணர்வு
திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட திருக்கோஷ்டியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு நிகழ்ச்சியை முன்னிட்டு பெண்களுக்கான சிறப்பு குடும்ப நல விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை முகாம் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் நடைபெற்றது. அப்போது கலெக்டர் பேசியதாவது:- மக்கள் தொகை பெருக்கம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 11-ந்தேதி உலக மக்கள் தொகை தினமாக ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்டு அனுசரிக்கப்பட்டு வருகிறது. மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் தேவைகள், பற்றாக்குறைகள் மற்றும் குடும்ப கட்டுப்பாட்டின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசால் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தாய்மார்களுக்கு சிறப்பு குடும்ப நல விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை முகாம் இந்த பகுதியில் நடைபெற்று வருகிறது.
சிறப்பு திட்டங்கள்
ஆணுக்கு பெண் சமம் என்ற அடிப்படையில் அனைத்து துறையிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக பெண்களுக்கான பல்வேறு சிறப்பு திட்டங்கள் தமிழத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்கள் தங்களது உடல் நலத்தை பேணிக்காப்பது மிகவும் அவசியமானதாகும். இதை கருத்தில் கொண்டு இளம் வயது திருமணத்தை தடுத்தல், இளம் வயது கர்ப்பம் மற்றும் தேவையற்ற கர்ப்பத்தை தவிர்த்தல், ஆரோக்கியமான பிறப்பு இடைவெளியினை உருவாக்குதல், சிறு குடும்ப நெறியை பாதுகாத்தல் போன்றவைகளில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
துறைரீதியாக நடத்தப்படும் இந்த முகாம் மூலம் மருத்துவ ரீதியாக தங்களுக்கு பயனுள்ள வகையில் மருத்துவ அலுவலர்கள் விரிவாக எடுத்துரைப்பார்கள். உங்களது வீடுகளுக்கு நேரில் வந்து மருத்துவ அலுவலர்கள் குடும்ப கட்டுப்பாடு மட்டுமன்றி உடல் நலத்தை பேணிகாப்பது குறித்து மருத்துவ ரீதியான ஆலோசனைகள் வழங்கவும் உள்ளளனர். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் டாக்டர் விஜயசந்திரன், சுகாதாரத்துறை துணை இயக்குனர்கள் தர்மர், செந்தில்குமார், வட்டார மருத்துவ அலுவலர் கவுசல்யா, திருக்கோஷ்டியூர் மருத்துவ அலுவலர் செந்தில்குமார், மக்கள் கல்வி மற்றும் தகவல் அலுவலர் ரெஜினாராணி அப்துல்சுக்கூர், மாவட்ட தாய் சேய் நல அலுவலர் மதியரசு, மாவட்ட விரிவாக்க கல்வியாளர் பிருந்தா, புள்ளியியல் உதவியாளர்கள் உள்பட சுகாதார பணி அலுவலர்கள், பெண்கள் கலந்துகொண்டனர்.