குடும்ப பிரச்சினை: 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று நர்சு தற்கொலை - திருவண்ணாமலையில் சோகம்
|திருவண்ணாமலையில் குடும்ப பிரச்சினை காரணமாக 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று நர்சு தற்கொலை செய்துகொண்டார்.
கீழ்பென்னாத்தூர்,
திருவண்ணாமலை அடுத்த சோமாசிப்பாடி அருகே உள்ள வற்றபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னராசு ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சூர்யா (வயது32) சோமாசிபாடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இத்தம்பதிக்கு லட்சகுமார் (4), உதயகுமார் (1) என்ற 2 குழந்தைகள் இருந்தனர்.
சின்னராசுக்கும் சூர்யாவுக்கும் இடையே குடும்ப பிரச்சனையில் அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று சின்னராசு திண்டிவனத்தில் நடந்த ஒரு திருமண விழாவுக்கு சென்று விட்டு நள்ளிரவு 1 மணியளவில் வீட்டிற்கு வந்தார். கதவை திறந்து பார்த்தபோது வீட்டில் மனைவி, குழந்தைகள் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனது தாயிடம் அவர்கள் குறித்து கேட்டார். அவருக்கும் அவர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. இதையடுத்து 2 பேரும் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சூர்யாவின் செல்போனுக்கு போன் செய்த போது அது அங்குள்ள ஏரிக்கரையில் உள்ள கிணற்றின் அருகே இருந்து சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அங்கு சென்று தேடி பார்த்தனர். கிணற்றில் குதித்து அவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகம் அடைந்தனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இளம்பெண் மற்றும் குழந்தைகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். முதலில் சூர்யாவின் உடல் பிணமாக மீட்கப்பட்டது. அதனை தொடர்ந்து இளைய மகன் உதயகுமார் உடலையும் தீயணைப்பு துறையினர் மீட்டனர். லட்சக்குமார் உடலை தேடி வருகின்றனர்.
குடும்ப பிரச்சனையில் சூர்யா, 2 குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொன்று விட்டு தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.