< Back
மாநில செய்திகள்
குடும்ப தகராறில் மனைவிக்கு அரிவாள் வெட்டு - விசாரணைக்கு பயந்து கணவன் தீக்குளித்து தற்கொலை

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

குடும்ப தகராறில் மனைவிக்கு அரிவாள் வெட்டு - விசாரணைக்கு பயந்து கணவன் தீக்குளித்து தற்கொலை

தினத்தந்தி
|
8 July 2024 10:47 PM GMT

குடும்ப தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் போலீஸ் விசாரணைக்கு பயந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை,

மதுரை செல்லூர் 50 அடி சாலை பகுதியைச் சேர்ந்தவர் சம்சுதீன் (42 வயது). இவருடைய மனைவி செய்யது அலி பாத்திமா (38 வயது). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில், சம்சுதீன் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த சம்சுதீன், வீட்டில் இருந்த அரிவாளால் மனைவியை வெட்டி உள்ளார். இதில் பாத்திமாவுக்கு காயம் ஏற்பட்டது. அவரது அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். செய்யது அலி பாத்திமாவை மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, போலீசார் வந்து தன்னிடம் விசாரணை நடத்தி விடுவார்களோ என்ற அச்சத்தில் இருந்த சம்சுதீன், வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதில் அவர் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செல்லூர் போலீசார், சம்சுதீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது:-

சம்சுதீனுக்கு ஏற்கனவே திருமணமாகி உள்ளது. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார். இதற்கிடையே, அவருக்கும், விவாகரத்து பெற்று வாழ்ந்த செய்யது அலி பாத்திமாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் திருமணம் செய்துள்ளனர்.

மது குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்வதை சம்சுதீன் வழக்கமாக கொண்டிருந்தார். மனைவி நடத்தையின் மீதும் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த காரணத்தினால் மனைவியை கொல்ல முயன்றதாக தெரிகிறது. காயங்களுடன் செய்யது அலி பாத்திமா சிகிச்சை பெற்று வருகிறார். போலீஸ் விசாரணைக்கு பயந்து, சம்சுதீன் தீக்குளித்து தற்கொலை செய்திருக்கலாம். இவ்வாறு போலீசார் கூறினர். இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்