குடும்ப தகராறு: கணவன் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய மனைவி
|குடும்ப தகராறில் கணவன் மீது கொதிக்கும் வெந்நீரை மனைவி ஊற்றியதால் அவரது உடல் வெந்தது.
திருமங்கலம்,
மதுரை மாவட்டம், திருமங்கலம் கூடகோவில் அருகே உலகாணி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பு (32 வயது).லாரி டிரைவர். இவருடைய மனைவி ஜோதிமணி (28 வயது), மாமனார் முருகன், மாமியார் மாணிக்கவள்ளி. சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற விபத்தில் டிரைவர் கருப்புவுக்கு ஒருகாலில் முறிவு ஏற்பட்டது. இதனால் வேலைக்கு போகவில்லை. மனைவி ஜோதிமணிதான் வேலைக்கு சென்று வந்தார்.
ஜோதிமணியின் பெற்றோரும் அந்த வீட்டில்தான் வசித்து வந்தார்கள். குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாமனார், மாமியாரிடம் ஏற்பட்ட பிரச்சினையில் கருப்புவை வீட்டை விட்டு வெளியே போக கூறியுள்ளார்கள். பிரச்சினை அதிகமாகவே கொதிக்கும் வெந்நீரை மாமியார், மாமனார், மனைவி ஆகிய மூவரும் சேர்ந்து தூக்கி வந்து கருப்பு மீது ஊற்றியதாக கூறப்படுகிறது.
இதில் அவர் உடல் வெந்து படுகாயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் மாமனார் முருகன், மாமியார் மாணிக்கவள்ளி, மனைவி ஜோதிமணி ஆகிய 3 பேரை கூடகோவில் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.