சென்னை
குடும்பத்தகராறு: காரை ஏற்றி போலீஸ்காரர் கொலை - உறவினருக்கு வலைவீச்சு
|செய்யூர் அருகே காரை ஏற்றி போலீஸ்காரர் கொலை செய்யப்பட்டார். உறவினரை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த வடக்கு செய்யூர் பகுதியை சேர்ந்தவர் காமேஷ்குமார் (வயது 37). இவர் சென்னையை அடுத்த நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவருக்கு செய்யூர் பகுதியில் சொந்தமாக விளை நிலங்கள் உள்ளன.
நேற்று காலை 11 மணி அளவில் போலீஸ்காரர் காமேஷ் குமார் தன்னுடைய விளை நிலத்தை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. இதனால் சால்ட் ரோடு பகுதி சாலையோரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது எதிர் திசையில் காரில் வந்த காமேஷ்குமாரின் அக்காள் கணவரான மதன்பிரபு மற்றும் அவரது நண்பர்கள் சாலையோரம் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்த காமேஷ்குமார் மீது காரை மோதி விட்டு, சாலையோரம் உள்ள சுவரின் மீதும் மோதி நின்றதாக தெரிகிறது.
இதில் காரின் அடியில் காமேஷ்குமார் சிக்கி கொண்டார். மோட்டார் சைக்கிளும் காரின் அடியில் சிக்கியது. கார் சுவரில் மோதியதில் என்ஜின் தீப்பற்றி எரிந்தது. மதன்பிரபு மற்றும் அவரது நண்பர்கள் காரை அங்கேயே விட்டு விட்டு தப்பிச்சென்று விட்டனர்.
அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காரில் எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் காரின் அடியில் சிக்கிக்கொண்ட காமேஷ் குமாரை மீட்டு செய்யூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் காமேஷ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
காமேஷ்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. போலீஸ்காரர் காமேஷ்குமாருக்கும், அவரது அக்காள் கணவரான மதன்பிரபுவுக்கும் ஏற்கனவே குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் அவர் காமேஷ்குமாரை காரை ஏற்றிக்கொன்றதாக தெரிகிறது.
இதுபற்றி செய்யூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவானவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.