செங்கல்பட்டு
குடும்பத்தகராறு: 4 மாத குழந்தையின் கழுத்தை நெரித்துக்கொன்ற தந்தை - உடலை முட்புதரில் வீசிய கொடூரம்
|குடும்பத்தகராறில் 4 மாத குழந்தையின் கழுத்தை நெரித்துக்கொன்றுவிட்டு உடலை முட்புதரில் வீசிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வருண் (வயது 20). இவருக்கும், சென்னையை அடுத்த மீனம்பாக்கம் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி (20) என்பவருக்கும் செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் விஜயலட்சுமி கர்ப்பம் அடைந்து, 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். பெண் வீட்டின் சம்மதத்துடன் வருணுக்கும், விஜயலட்சுமிக்கு திருமணம் நடந்தது. இதில் வருணுடைய பெற்றோர்கள், உறவினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
திருமணம் ஆகி 4 மாதங்களிலேயே விஜயலட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. விஜயலட்சுமி, வருண் ஆகியோர் காஞ்சீபுரம் மாவட்டம் மாடம்பாக்கம் பகுதியில் வசித்து வந்தனர்.
இந்தநிலையில் வருண் தனது குடும்பத்தினரிடம் தனக்கு நடந்த திருமணத்தை மறைத்துவிட்டு விஜயலட்சுமி என்ற பெண்ணை காதலித்து வருவதாகவும், திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் கூறினார். அதற்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததுடன், திருமணத்துக்கான ஏற்பாடுகளையும் செய்தனர்.
இதற்கிடையில் வருண், ஏற்கனவே விஜயலட்சுமிக்கு பிறந்த குழந்தையை மாடம்பாக்கம் பகுதியில் உள்ள தன்னுடைய தோழியிடம் ஒப்படைத்து வளர்க்க கூறினார். பின்னர் 2-வது முறையாக இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது. அப்போது நமக்கு பிறந்த குழந்தை எங்கே இருக்கிறது? என்று கணவர் வருணிடம் விஜயலட்சுமி கேட்டார்.
அதற்கு வருண், மாடம்பாக்கத்தில் உள்ள தோழியிடம் இருப்பதாக கூறி வந்தார். குழந்தை தொடர்பாக கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதே பதிலை தொடர்ந்து கூறி வந்ததால் சந்தேகம் அடைந்த விஜயலட்சுமி, மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் குழந்தையை காணவில்லை என புகார் அளித்தார். அதன்பேரில் மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயலட்சுமியின் கணவர் வருணை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் குழந்தையை கொன்று புதைத்து விட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். வருணை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி போலீசாரிடம் வருண் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-
விஜயலட்சுமிக்கும், எனக்கும் ஏற்கனவே திருமணம் நடைபெற்று குழந்தை பிறந்தது எங்கள் குடும்பத்தினருக்கு தெரியாது. இதனால் பயந்து போன நான் திருமணத்துக்கு 2 நாட்கள் முன்பு மாடம்பாக்கத்தில் உள்ள எனது தோழியிடம் இருந்து குழந்தையை வாங்கிக்கொண்டு கூடுவாஞ்சேரி அருகே உள்ள பெருமாட்டு நல்லூர் சுடுகாட்டு பகுதியக்கு சென்றேன். அங்கு குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, உடலை அங்குள்ள முட்புதரில் வீசிவிட்டேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் வருணை, பெருமாட்டுநல்லூர் சுடுகாட்டு பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு குழந்தை உடல் வீசப்பட்ட இடத்தை அவர் போலீசாரிடம் காட்டினார். போலீசார் அங்கு கிடந்த குழந்தையின் எலும்புக்கூடுகளை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். இது தொடர்பாக மணிமங்கலம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.