திருவள்ளூர்
குடிப்பழக்கத்தால் குடும்ப தகராறு: தொழிற்சாலை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை - பொதட்டூர்பேட்டையில் பரிதாபம்
|பொதட்டூர்பேட்டையில் குடிப்பழக்கத்தை கைவிட முடியாமல் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதில் தனியார் தொழிற்சாலை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை காஞ்சீபுரம் தெருவில் வசித்து வருபவர் குமார் (வயது 34). இவர் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சவுந்தர்யா (28). குமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் குடிப்பழக்கத்தை நிறுத்த முடியாததால் மனமுடைந்த குமார், நேற்று முன்தினம் இரவு தனது படுக்கையறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து, நேற்று அதிகாலை 5 மணியளவில் மனைவி சவுந்தர்யா அறைக்கு சென்று பார்த்தபோது குமார் மின்விசிறியில் தூக்கில் தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதைத்தொடர்ந்து உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக பொதட்டூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சவுந்தர்யா பொதட்டூர்பேட்டை போலீசில் அளித்த தகவலில் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக குமாரின் உடலை திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.