< Back
மாநில செய்திகள்
திருட்டு போனதாக புகார் கூறப்பட்ட 100 பவுன் நகைகள் வீட்டிலேயே மீட்பு
சென்னை
மாநில செய்திகள்

திருட்டு போனதாக புகார் கூறப்பட்ட 100 பவுன் நகைகள் வீட்டிலேயே மீட்பு

தினத்தந்தி
|
13 Feb 2023 11:37 AM IST

சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் என்ஜினீயர் வீட்டில் திருட்டு போனதாக புகார் கூறப்பட்ட 100 பவுன் நகைகளை அவரது வீட்டிலேயே கண்டுபிடித்து போலீசார் ஒப்படைத்தனர்.

என்ஜினீயர்

சென்னை எம்.ஜி.ஆர்.நகர் புகழேந்தி தெருவில் வசிப்பவர் சரவணன் (வயது 36). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். இவரது வீட்டில் லாக்கரில் வைத்திருந்த சுமார் 100 பவுன் தங்க நகைகள் திருட்டு போய் விட்டதாக நேற்று காலையில் எம்.ஜி.ஆர்.நகர் போலீசில் புகார் கொடுத்தார்.

உடனடியாக அசோக்நகர் உதவி போலீஸ் கமிஷனர் தனசேகரன், இன்ஸ்பெக்டர் பலவேசம் ஆகியோர் போலீஸ் படையுடன் சென்று விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்கள் சென்று நகையை திருடிய நபர்களின் கைரேகை சிக்குகிறதா? என்று ஆய்வு செய்தனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. தனி போலீஸ் படை அதிரடியாக விசாரணையில் இறங்கினார்கள். ஏற்கனவே திரு.வி.க.நகரில் உள்ள நகைக்கடையில் 9 கிலோ தங்க-வைர நகைகள் கொள்ளைபோன வழக்கு பரபரப்பாக பேசப்படும் நிலையில், இந்த புகாரும் வந்ததால் போலீசாருக்கு கடும் நெருக்கடி உண்டானது.

வீட்டிலேயே கண்டுபிடிப்பு

இந்த நிலையில் போலீசாருக்கு ஒரு சந்தோஷ ஒளி தென்பட்டது. என்ஜினீயர் சரவணன் திருட்டு போனதாக புகார் கூறிய 100 பவுன் நகைகளும் அவரது வீட்டிலேயே ஒரு பீரோவில் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். நகைகள் சரவணனிடம் ஒப்படைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். லாக்கரில் நகைகள் இல்லாததால், சரவணன் உடனடியாக போலீசில் புகார் கொடுத்து போலீசாரை சிறிது நேரம் கதிகலங்க வைத்து விட்டார்.

நகைகள் திரும்ப கிடைத்த மகிழ்ச்சியில், உதவி கமிஷனர் தனசேகரன் தலைமையிலான தனிப்படையினர் சந்தோஷமாக போலீஸ் நிலையம் திரும்பிவந்தனர். மீட்கப்பட்ட நகைகளை போலீசார் புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டனர்.

மேலும் செய்திகள்