மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கணவர் மீது பொய் புகார்: 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி
|பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட சிறுமியை அழைத்து ஐகோர்ட்டு நீதிபதிகள் நேரில் விசாரணை நடத்தினர்.
சென்னை,
சென்னை செனாய்நகர் பகுதியைச் சேர்ந்த 39 வயது பெண், ஸ்கேன் சென்டர் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவருக்கும், இவரது கணவருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இதன்காரணமாக அந்த பெண் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.
அதேவேளையில், கணவரை குற்ற வழக்கில் சிக்க வைத்து சிறைக்குள் தள்ளி பழிவாங்கவும் திட்டமிட்டார். தனது மகள் மூலம் இந்த திட்டத்தை அரங்கேற்ற முடிவு செய்த அந்த பெண், தனது மைனர் மகளுக்கு கணவர் பாலியல் தொந்தரவு கொடுத்தது போன்றும், இதில் மைனர் மகள் கர்ப்பமானதாகவும் போலீசில் புகார் அளித்து கணவரை சிக்கவைக்க திட்டம் தீட்டினார்.
தான் வேலை பார்த்து வந்த ஸ்கேன் சென்டர் மூலம் இதற்கான போலி ஆதாரங்களை உருவாக்க முடிவு செய்து, தனது மகளுக்கு சிறுநீர் பாதையில் பிரச்சினை இருந்து வந்ததாகவும், அதற்காக சிறுநீரை ஆய்வக பரிசோதனை செய்து பார்த்த போது மகள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது போன்று போலி ஆவணங்களை தயாரித்தார். அந்த போலி ஆவணத்தில் டாக்டரின் கையெழுத்தையும் போலியாக பதிவு செய்தார். இந்த ஆவணங்களை எல்லாம் தயார் செய்த அந்த பெண், சென்னை கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி தனது மகளுக்கு கணவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், அதில் தனது மகள் கர்ப்பமானதாகவும் பாலியல் புகாரை கொடுத்தார்.
அந்த புகாருக்கு ஆதரவாக தான் போலியாக தயாரித்த ஆவணங்களையும் அளித்தார். போலீசாரும், இந்த புகாரை உண்மை என நம்பி அந்த பெண்ணின் கணவர் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
எந்த குற்றமும் செய்யாத பெண்ணின் கணவர், தன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது அறிந்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டை நாடினார்.
பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட சிறுமியை அழைத்து ஐகோர்ட்டு நீதிபதிகள் நேரில் விசாரணை நடத்தினர். சிறுமியின் வாக்குமூலத்தை கேமரா மூலம் பதிவு செய்தனர். அப்போது, அந்த சிறுமி தனது தந்தை தன்னிடம் தவறாக நடக்கவில்லை என்றும், பெற்றோருக்கு இடையேயான குடும்ப தகராறில் தந்தையை சிக்க வைக்க தாயார் இந்த செயலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, சிறுமியின் தந்தை மீதான போக்சோ வழக்கை ரத்து செய்த ஐகோர்ட்டு, சிறுமியின் தாயார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்படி, அந்த பெண் மீது கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்னிலையில் நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, அந்த பெண்ணுக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனையும், போக்சோ சட்டப்பிரிவின் கீழ் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.