< Back
மாநில செய்திகள்
காவல்துறை மீது தவறான குற்றச்சாட்டு: நடிகர் இளவரசுக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை
மாநில செய்திகள்

காவல்துறை மீது தவறான குற்றச்சாட்டு: நடிகர் இளவரசுக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை

தினத்தந்தி
|
29 Jan 2024 3:57 PM IST

நடிகரும் ஒளிப்பதிவாளருமான இளவரசுக்கு சென்னை ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை,

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கம் கடந்த 2018 ஆம் ஆண்டு, சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக தியாகராய நகர் காவல் நிலையத்தில் நிதி முறைகேடு தொடர்பாக புகார் அளித்தது. இந்த புகார் தொடர்பான விசாரணையை விரைவாக முடித்து, இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நான்கு மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்ததது. ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் போலீசார் விசாரணையை முடிக்கவில்லை என ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் அதன் செயலாளரும், நடிகருமான இளவரசு தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த அவமதிப்பு வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த மாதம் 12 ம்தேதி இளவரசு காவல் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளதாகக் கூறி, அதுதொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் காவல் நிலையத்தினரால் சமர்ப்பிக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளவரசு தரப்பு, டிசம்பர் 13ம் தேதிதான் ஆஜராகி வாக்குமூலம் அளித்ததாகவும், டிசம்பர் 12 ம் தேதி மாமல்லபுரத்தில் படப்பிடிப்பில் இருந்ததாகவும், காவல்துறையினரின் சிசிடிவி காட்சிகள் போலியானவை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, குறிப்பிட்ட தேதியில் நடிகர் இளவரசு எங்கு இருந்தார் என்பதற்கான மொபைல் லோகேஷன் விவரங்களையும், சிடிஆர் எனும் மொபைல் அழைப்பு விவரங்களையும் தாக்கல் செய்யுமாறு, காவல் துறைக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி, மொபைல் லோகேஷன் விவரங்கள் மற்றும் சிடிஆர் விவரங்களை தாக்கல் செய்தார். இளவரசு தரப்பில், 12ம் தேதி படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதால் மாமல்லபுரம் செல்லவில்லை என்றும், தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. காவல் துறை சமர்ப்பித்த விவரங்களை ஆய்வு செய்த நீதிபதி, இளவரசு காவல் நிலையத்தில் ஆஜரானதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், நீதிமன்றத்தில் பொய் சொல்ல வேண்டாம் எனவும் தெரிவித்தார். மேலும், 12ம் தேதி காவல் நிலையத்தில் ஆஜரானதை கூறி, மன்னிப்பு கோரினால், அதனை ஏற்க தயாராக இருப்பதாக தெரிவித்த நீதிபதி, இல்லாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்து, காவல்துறை தாக்கல் செய்த விவரங்கள் தொடர்பாக மனுதாரர் விளக்கமளிக்க உத்தரவிட்டு விசாரணையை நாளை தள்ளிவைத்தார்.

மேலும் செய்திகள்