புதுக்கோட்டை
பலாப்பழங்களின் விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலை
|வடகாடு பகுதியில் பலாப்பழங்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
வடகாடு:
பலாப்பழங்கள்
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு, மாங்காடு, அனவயல், புள்ளான்விடுதி, நெடுவாசல், கீரமங்கலம், மேற்பனைக்காடு, பனங்குளம், குளமங்கலம், கொத்தமங்கலம், மறமடக்கி உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டு தோறும் விவசாயிகள் மூலமாக அதிக அளவில் பலாப்பழங்கள் உற்பத்தி நடந்து வருகிறது. இப்பகுதிகளில் விளையும் பலாப்பலத்திற்கு என தனி மவுசு மற்றும் மிகுந்த ருசி இருப்பதால் தமிழகம் மட்டுமின்றி மும்பை, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மட்டுமின்றி சவுதி அரேபியா, துபாய், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு கூட ஏற்றுமதி செய்யப்பட்டு வரப்படுகிறது.
விலை வீழ்ச்சி
கடந்த 2 ஆண்டுகளாகவே கொரோனா பொதுத்தடையால் பலாப்பழங்களை விற்பனை செய்ய முடியாமல் பலாமரங்களியே பழுத்து அழுகி வீணாகி வந்தது. இதனால் விவசாயிகள் பெரும் பொருளாதார சிக்கலில் சிக்கி பெரும் சிரமப்பட்டு வந்தனர். இந்த ஆண்டுதான் ஓரளவு பலாப்பழங்களின் விற்பனை நடந்து வந்த நிலையில், தற்சமயம் அதிகரித்துள்ள உற்பத்தி காரணமாக நாள் ஒன்றுக்கு சுமார் 500 டன்னுக்கும் குறைவில்லாமல் பலாப்பழங்கள் வரத்து உள்ளது.
மேலும் மாம்பழ உற்பத்தி மற்றும் விற்பனை பிற பகுதிகளில் கணிசமான முறையில் அதிகரித்து வருவதாலும், அதன் விலை வீழ்ச்சி அடைந்த நிலையில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
ரூ.150-க்கு விற்பனை
தற்போது சிறிய அளவிலான பலாப்பழங்கள் ரூ.10-க்கும் ரூ.20-க்கும் பெரிய அளவிலான சுமார் ரூ.1,000 வரை விலை போகக்கூடிய பலாப்பழங்கள் ரூ.150 மற்றும் ரூ.200-க்கு மட்டுமே விற்பனை ஆகி வருவதால் விவசாயிகள் கவலைப்பட்டு வருகின்றனர். இதனால் மதிப்பு கூட்டும் முறையில் இப்பகுதிகளில் விளைந்த பலாப்பழங்களை விற்பனை செய்ய தமிழக அரசு உதவ வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.