புதுக்கோட்டை
எலுமிச்சை பழங்கள் விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலை
|வடகாடு சுற்றுவட்டார பகுதிகளில் எலுமிச்சை பழங்கள் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலைப்பட்டு வருகின்றனர்.
எலுமிச்சை விவசாயம்
வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் எலுமிச்சை உற்பத்தியில் எண்ணற்ற விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதிகளில் விவசாயிகள் எலுமிச்சை மரக்கன்றுகளை தென்னை, மா, பலா, வாழை உள்ளிட்டவற்றில் ஊடு பயிராகவும், தனித்தோப்பாகவும் பயிரிட்டு பராமரித்து வருகின்றனர்.
எலுமிச்சை பழங்கள் குளிர்ச்சி தரக்கூடியது என்பதால் கோடை வெயில் காலத்தில் இதன் தேவை அதிக அளவில் இருந்து வருகின்றன. மேலும் உடல் பருமனை குறைக்கவும், சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கவும், வாயு தொல்லையை தடுக்கவும், அஜீரண பிரச்சினைகளை தீர்க்கவும் இப்படி எண்ணற்ற வியாதிகளுக்கு அரு மருந்தாகவும், அதிசய கனியாகவும் கருதப்படுகிறது.
விலை வீழ்ச்சி
எலுமிச்சை பழங்கள் உற்பத்தி இப்பகுதிகளில் தற்போது அதிகரித்து வரும் நிலையில், தற்போது விலை வீழ்ச்சி கண்டு இருப்பது விவசாயிகளை கவலைப்பட வைத்துள்ளது.
மேலும் கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக, ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை ஆகி கொண்டிருந்த எலுமிச்சை பழங்களின் விலை வீழ்ச்சி கண்டு தற்சமயம் ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை ஆகி வருவதாகவும் கூறப்படுகிறது.
ஏற்றுமதி
இங்கிருந்து கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு எலுமிச்சை பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், கோடை வெயில் காலத்தில் தான் இதன் விலை ஓரளவுக்கு உயர்வு பெற்று விவசாயிகளுக்கு சற்று ஆறுதல் அளித்து வருகிறது.
இந்த நிலையில், எலுமிச்சை பழங்களின் விலை வீழ்ச்சி கண்டு வருவது விவசாயிகள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.