அந்தியோதயா ரெயிலில் போலி டிக்கெட் பரிசோதகர்: சிக்கியது எப்படி?
|தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா ரெயிலில் வந்த போலி டிக்கெட் பரிசோதகர் மதுரை அதிகாரிகளிடம் சிக்கினார்.
மதுரை,
சென்னை தாம்பரத்தில் இருந்து மதுரை வழியாக நாகர்கோவிலுக்கு முற்றிலும் முன்பதிவில்லாத அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் இரு மார்க்கங்களிலும் இயக்கப்படுகிறது.
இந்த ரெயில், நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது. திருச்சி-திண்டுக்கல் இடையே வந்து கொண்டிருந்த போது, ஒருவர் டிக்கெட் பரிசோதகரை போல உடை மற்றும் அடையாள அட்டை அணிந்து பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்து கொண்டிருந்தார்.
ஆனால், அந்த ரெயிலுக்கு அந்த வழித்தடத்தில் டிக்கெட் பரிசோதனை செய்ய மதுரையை சேர்ந்த டிக்கெட் பரிசோதகர் சரவண செல்வி என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் தனக்கு பதிலாக வேறு ஒருவர் ரெயிலில் டிக்கெட் பரிசோதனை செய்ததை கவனித்து மதுரையில் உள்ள வர்த்தக பிரிவு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
அதனை தொடந்து மதுரை கோட்ட ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அந்த டிக்கெட் பரிசோதகரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் போலி டிக்கெட் பரிசோதகர் என்று தெரியவந்தது. மேலும், அவர் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த மணிகண்டன் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
பின்னர் மதுரையில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் அலுவலகத்தில் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர் யார், எதற்காக இந்த செயலில் ஈடுபட்டார், இதுவரை எத்தனை ரெயில்களில் பரிசோதனை என்ற பெயரில் பயணிகளிடம் அபராதமாக பணம் வசூலித்துள்ளார், அவர் அதற்கு வழங்கிய ரசீது என்ன, அந்த ரசீதுகளை எங்கு அச்சடித்தார், அவருக்கு போலி அடையாள அட்டை தயாரித்து கொடுத்தவர்கள் யார், அவருடன் வேறு யாரும் கூட்டாக டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டனரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.