கன்னியாகுமரி
பிரணவ் நகைக்கடையில் போலி நகைகள்
|நாகர்கோவில் பிரணவ் நகைக்கடையில் போலி நகைகள் இருந்தது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் தெரியவந்தது.
திருச்சி மாவட்டத்தில் பிரணவ் என்ற பிரபல நகைக்கடை இயங்கி வந்தது. அதன் கிளைகள் நாகர்கோவில், மதுரை, சென்னை, கும்பகோணம், கோவை ஆகிய இடங்களிலும் செயல்பட்டது.
இந்த நகைக்கடையில் நகை வாங்கினால் செய்கூலி சேதாரம் இல்லை எனவும், நகை சிறுசேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் இருப்பதாக துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரம் செய்து, பல முதலீட்டாளர்களை சேர்த்துள்ளனர்.
மேலும் அவர்கள் செலுத்தும் முதலீட்டு தொகைக்கு 9 சதவீதம் வரை போனஸ் தருவதாக கூறியுள்ளனர். இந்த ஆசை வார்த்தைகளை நம்பிய ஆயிரக்கணக்கானோா் முதலீடு செய்தனர். ஆனால் முதலீடு செய்த தொகைக்கான முதிர்வு தேதியின்போது அந்த நகைக்கடைக்கு சென்ற முதலீட்டாளர்கள் தாங்கள் செலுத்திய தொகையை திரும்ப கேட்டபோது திருப்பித்தராமல் மோசடியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அந்த கடையின் வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் திருச்சி, மதுரை உள்ளிட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்து வருகின்றனர். இந்த புகார் தொடர்பாக திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அந்த கடையின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு குமரேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள பிரணவ் நகைக்கடையில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். இந்த சோதனை சுமார் 4 மணி நேரம் நடந்தது.
நேற்று 2-வது நாளாகவும் நகைக்கடையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சார்பில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அந்த கடையின் மாடிக்கு செல்லும் வழி பூட்டப்பட்டு இருந்தது. மாற்றுச்சாவி இல்லாததால் அந்த கதவை வெல்டிங் எந்திரம் மூலம் திறந்து சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் கடையில் 50 செயின்கள் மற்றும் நெக்லஸ்கள், 100 மோதிரங்கள், 100 கம்மல்கள் இருந்தன. ஆனால் இந்த நகைகள் அனைத்தும் போலியானவை என போலீசார் அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். இதனால் போலி நகையை விற்றார்களா? எனவும் விசாரணை நடக்கிறது.
அதே சமயத்தில் பணம் செலுத்தி ஏமாந்த குமரி மாவட்டத்தை சேர்ந்த சிலர் போலீசாரிடம், தாங்களும் பணம் செலுத்தி ஏமாந்ததாக தெரிவித்தனர். அதற்கு போலீசார் இது தொடர்பாக திருச்சியில்தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே அங்கு சென்று தான் புகார் கொடுக்க வேண்டும் என கூறி அனுப்பி வைத்தனர்.