கேளம்பாக்கத்தில் போலி 'ஹால்மார்க்' முத்திரை நகைகள் பறிமுதல்
|கேளம்பாக்கத்தில் உள்ள நகைக்கடையில் போலி ‘ஹால்மார்க்’ முத்திரை நகைகளை இந்திய தர நிர்ணய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை,
சென்னை கேளம்பாக்கம் ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள நகை கடை ஒன்றில் போலி ஹால்மார்க் முத்திரை பதித்த நகைகள் விற்பனை செய்யப்படுவதாக இந்திய தர நிர்ணயத்தின் (பி.எஸ்.ஐ.) சென்னை கிளை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் பி.எஸ்.ஐ. இணை இயக்குனர் ஜீவானந்தம், துணை இயக்குனர் தினேஷ் ராஜகோபாலன் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் அந்த நகைக்கடையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் போலி ஹால்மார்க் முத்திரை பதித்த 1.173 கிலோ எடையுள்ள 262 நகைகள் சிக்கியது. இதில் 16 வளையல்கள், 25 செயின்கள், 4 ஜோடி கம்பல், 217 மோதிரங்கள் அடங்கும். பின்னர் அந்த நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக பி.எஸ்.ஐ. சென்னை கிளை அலுவலகத்தின் தலைவர் ஜி.பவானி கூறுகையில், "இந்திய தர நிர்ணய நிறுவன சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட நகைக்கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த குற்றத்துக்கு ஓராண்டு வரையிலான சிறைத்தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படலாம். போலி ஹால்மார்க் முத்திரையுடன் நகைகள் விற்பனை செய்வது தெரிய வந்தால் தரமணியில் உள்ள பி.ஐ.எஸ். சென்னை கிளை அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். hcnbo1@bis.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தகவலை பதிவு செய்யலாம். தங்க நகையில் உள்ள HUID எண்ணை BIS care என்ற செல்போன் செயலியில் பதிவிட்டு ஹால்மார்க் முத்திரையின் நம்பகத்தன்மையை பொதுமக்கள் சரிபார்க்கலாம். மேலும் உண்மையான ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகள் பற்றிய விவரங்களை www.bis.gov.in என்ற இணையதள மூலமாகவும் அறிந்துக் கொள்ளலாம்" என்று அவர் கூறினார்.