மதுரை
போலி பத்திரப்பதிவுகளை இனி பதிவாளரே ரத்து செய்யலாம்
|கோர்ட்டுக்கு செல்ல தேவையில்லை. போலி பத்திரப்பதிவுகளை இனி பதிவாளரே ரத்து செய்யலாம் என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.
கோர்ட்டுக்கு செல்ல தேவையில்லை. போலி பத்திரப்பதிவுகளை இனி பதிவாளரே ரத்து செய்யலாம் என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.
அமைச்சர் ஆய்வு
மதுரை ஒத்தக்கடையில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில் சர்வர் கோளாறு காரணமாக பத்திரப்பதிவு மிகவும் மந்தமாக நடப்பதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தன. எனவே வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, துறையின் அரசு செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, பத்திரப்பதிவு துறை தலைவர் சிவனருள் ஆகியோர் நேற்று ஒத்தக்கடை ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு ஆய்வுக்கு சென்றனர். அங்கு அவர்கள் சர்வர் கோளாறு ஏற்படுகிறதா, பத்திரப்பதிவிற்கு ஏன் காலதாமதம் ஆகிறது என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்தனர்.
அப்போது சார்பதிவாளர்கள் பணிகளை மந்தமாக செய்வதும், அதற்கு சர்வர் கோளாறு என சொல்வதும் தெரிந்தது. எனவே சார்பதிவாளர்களை அமைச்சர் கண்டித்தார். மேலும் அவர் டோக்கன் போட்டு விட்டால் அவர்களுக்கு அன்றைய தினம் நிச்சயம் பத்திர பதிவு செய்ய வேண்டும் என்றும், பொதுமக்களை அலைக்கழிக்க கூடாது என்றும் எச்சரித்தார்.
பின்னர் அமைச்சர் மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
பத்திரப்பதிவு துறையில் சர்வர் பிரச்சினை இல்லை. எனவே பொதுமக்கள் எளிதாகவும், விரைவாகவும் பத்திரங்களை பதிவு செய்யலாம். ஒரு பத்திரப்பதிவிற்கு 10 முதல் 13 நிமிடங்கள் ஆகின்றது. அதனை 5 நிமிடங்களாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சார்பதிவாளர்களே ரத்து செய்யலாம்
இந்தியாவிற்கே முன்னோடியாக தமிழக பத்திரப்பதிவு துறையில் புதிய சட்டம் அடுத்த வாரம் முதல் அமல்படுத்தப்படுகிறது. பொதுவாக போலி பத்திரப்பதிவுகளை கோர்ட்டு மூலம் தான் ரத்து செய்ய முடியும். இதனால் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை போக்க இனி போலி பத்திரப்பதிவுகளை மாவட்ட சார்பதிவாளர்களே ரத்து செய்ய முடியும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது ஜனாதிபதியும் அதற்கு ஒப்புதல் கொடுத்து உள்ளார்.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 10 லட்சத்து 92 ஆயிரம் பத்திரப்பதிவு மூலம் அரசுக்கு ரூ.5,440 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தற்போது இதே காலகட்டத்தில் 16 லட்சம் பத்திரப்பதிவு மூலம் அரசுக்கு ரூ.7,865 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
முற்றிலும் பொய்
ரூ.120 கோடியில் எனது மகன் திருமணம் நடந்ததாக முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. எனது மகன் திருமணம் குறித்து சிலர் தவறான தகவல்களை பரப்புகின்றனர். திருமணத்தில் ஏழை எளியோர்- செல்வந்தர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் அழைத்து சாப்பாடு போட்டேன். யாரும் சாப்பிடுவதற்காக காத்திருக்க கூடாது. அனைவரையும் ஒன்றாக அமர வைத்து சாப்பிட வைக்க வேண்டும். இது தான் எனது எண்ணம். அதைத்தான் நான் செய்தேன். இது தான் தி.மு.க.வின் சமூக நீதி. இந்த திருமணத்தால் யாருக்கும் இடையூறு ஏற்படவில்லை. மக்கள் தங்கள் இல்ல விழாவிற்கு வந்தது போல் வந்து சென்றார்கள். அனைவரும் வயிராற சாப்பிட்டு சென்றார்கள். இது தான் எனக்கு மகிழ்ச்சி. ஆனால் கற்பனை கூட பண்ண முடியாத அளவிற்கு 2 ஆயிரம் ஆடுகள், 5 ஆயிரம் கோழிகள், ரூ.120 கோடி செலவு என்று சொல்வது எல்லாம் முற்றிலும் பொய்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூடுதல் பதிவுத்துறை தலைவர் நல்லசிவன், மதுரை மண்டல பதிவுத்துறை துணை தலைவர் ஜெகதீசன் ஆகியோர் உடன் இருந்தனர்.