சென்னை நெடுஞ்சாலையில் பறந்த 500 ரூபாய் கள்ள நோட்டுகள்- பொதுமக்கள் போட்டி போட்டு எடுத்ததால் பரபரப்பு
|சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் காரில் வந்த கும்பல் ஒன்று கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகளை கொட்டிவிட்டு சென்று விட்டனர்.
வேலூர்:
வேலூர் கொணவட்டம் சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் திருமண மண்டபம் உள்ளது. இதன் அருகே இன்று காலை காரில் வந்த கும்பல் ஒன்று கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகளை கொட்டிவிட்டு சென்று விட்டனர். காற்றில் பிரிந்த ரூபாய் நோட்டுகள் காற்றில் பறந்தன.
இதனை கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ரூபாய் நோட்டுகளை போட்டி போட்டு எடுத்தனர். அதில் ஒருவர் இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வேலூர் வடக்கு போலீசார் அங்கு சிதறி கிடந்த ரூபாய் நோட்டுகளை சேகரித்தனர். அதனை போலீஸ் நிலையம் கொண்டு வந்து எண்ணிய போது ரூ.14.50 லட்சம் ரூபாய் நோட்டுகள் இருந்தது.
ரூபாய் நோட்டுகளை சோதனை செய்தபோது அது கலர் ஜெராக்ஸ் எடுத்த கள்ள நோட்டுகள் என தெரியவந்தது. கள்ள நோட்டுகளை வீசி சென்ற கும்பல் யார் என்பதை அறிய அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
நேற்று முன்தினம் இரவு பள்ளிகொண்டா அருகே காரிலிருந்து லாரிக்கு பணத்தை மாற்றியபோது போலீசாரிடம் ரூ.14.70 கோடி சிக்கி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று காலை தேசிய நெடுஞ்சாலையில் கள்ள நோட்டுகளை வீசி சென்ற சம்பவம் வேலூரில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.