திருவண்ணாமலை
நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
|ஆரணி தாலுகா அலுவலகம் முன்பு நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஆரணி
தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் கடந்த 7-ந் தேதி முதல் இன்று வரை 3 நாட்கள் வேலை நிறுத்தம் செய்து தமிழக அரசுக்கு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ஆரணி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் ஆரணி வட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணைத்தலைவர் தனசேகர் கலந்து கொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் பொது வினியோகத் திட்டத்திற்கென தனித்துறை உருவாக்கப்பட வேண்டும்,
5 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 17 சதவீத அகவிலைப்படியை சேர்த்து அரசு பணியாளர்களுக்கு வழங்கக்கூடிய 32 சதவீத அகவிலைப்படியை நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
முடிவில் மாவட்ட பொருளாளர் குமார் நன்றி கூறினார்.