< Back
மாநில செய்திகள்
கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றாதஓய்வு பெற்ற கல்வி அதிகாரிக்கு ஜெயில்- நீதிபதி உத்தரவு
மதுரை
மாநில செய்திகள்

கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றாதஓய்வு பெற்ற கல்வி அதிகாரிக்கு ஜெயில்- நீதிபதி உத்தரவு

தினத்தந்தி
|
20 Sept 2023 1:44 AM IST

கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றாத ஓய்வு பெற்ற கல்வி மாவட்ட அலுவலருக்கு 4 வாரம் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.


கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றாத ஓய்வு பெற்ற கல்வி மாவட்ட அலுவலருக்கு 4 வாரம் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

அவமதிப்பு வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஜான்சிராணி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஒரு கல்வி நிறுவனத்தில் கடந்த 2015-ம் ஆண்டு பணியில் சேர்ந்தேன். தனது பணியை வரன்முறை செய்து தனக்கு வரவேண்டிய பண பலன்களையும், பதவி உயர்வுகளையும் முறையாக வழங்க உத்தரவிட கோரி கடந்த 2019-ம் ஆண்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தேன். இந்த வழக்கில், பணி வரன்முறை செய்து, பணப்பலன்களை வழங்க உத்தரவிடப்பட்டது.

இதனை எதிர்த்து, பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2020-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையே, 3 வருடங்கள் ஆன பிறகும் கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றாத மாவட்ட கல்வித்துறை அதிகாரி மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.

4 வார சிறை தண்டனை

அப்போது, 2 வருடங்களுக்கும் மேலாக கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றாதது குறித்து கல்வி மாவட்ட அலுவலர் லட்சுமணசாமி (தற்போது ஓய்வு பெற்று விட்டார்) நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று நீதிபதி ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தார்.. இந்த நிலையில், லட்சுமணசாமி கோர்ட்டில் ஆஜரானார். அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அறிக்கையில் கோர்ட்டு உத்தரவு நிறைவேற்றப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. அத்துடன் தன் மீதான கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது. அதனை பார்த்த நீதிபதி, 2½ ஆண்டுகளாக ஏன் நிறைவேற்றவில்லை என்பதற்கு சொல்லப்படும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. இதன்மூலம் கல்வி மாவட்ட அலுவலர் கோர்ட்டு உத்தரவை மதிக்கவில்லை என்பது தெளிவாகிறது. அவர் நேரடியாக கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளார். எனவே, அவருக்கு 4 வார சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த தண்டனை ஐகோர்ட்டு பதிவாளர் மூலம் நிறைவேற்றப்படும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Related Tags :
மேலும் செய்திகள்