திருவள்ளூர்
கும்மிடிப்பூண்டி அருகே வாகனம் மோதி தொழிற்சாலை ஊழியர் சாவு
|கும்மிடிப்பூண்டி அருகே வாகனம் மோதி தொழிற்சாலை ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கோட்டகரையில் உள்ள நேதாஜி நகரில் வசித்து வந்தவர் ஏழுமலை (வயது 45). இவருக்கு தரணி (39) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்த ஏழுமலை, தேர்வழி ஊராட்சியின் முன்னாள் 8-வது வார்டு உறுப்பினர் ஆவார்.
கடந்த 9-ந்தேதி கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் எளாவூர் நோக்கி ஏழுமலை தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தார்.
இதனையடுத்து சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் ஏழுமலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.