திருவள்ளூர்
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தொழிற்சாலையில் தொழிலாளி சாவு
|கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தொழிற்சாலையில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான இரும்பு சேனல்களை கொண்டு கட்டிடங்களை அமைத்து கொடுக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு தினக்கூலி அடிப்படையில் கடந்த 2 ஆண்டுகளாக சென்னை கத்திவாக்கத்தை சேர்ந்த தர்மலிங்கம் (வயது 65) என்பவர் தினக்கூலியாக வேலை செய்து வந்தார். இவருக்கு பத்மா (58) என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
நேற்று தொழிற்சாலையில், தர்மலிங்கத்தின் மீது கிரேன் மூலம் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு எடுத்து செல்லப்பட்ட இரும்பு கம்பி அவரது காலில் மோதியதாக கூறப்படுகிறது.
இதில் நிலை தடுமாறி விழுந்த அவரது தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.