தூத்துக்குடி
நாசரேத் அருகே திருமண வீட்டில் கோஷ்டி மோதல்; 2 பேருக்கு அரிவாள் வெட்டு
|நாசரேத் அருகே திருமண வீட்டில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
திருமண வீட்டில் சமையல் தாமதம்
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உடையார்குளம் காந்திநகரைச் சேர்ந்தவர் பொன் பெருமாள் (வயது 50). இவருடைய சகோதரி மகன் திருமணம் நேற்று முன்தினம் நடந்தது. இதற்காக மணமகனின் வீட்டு அருகிலேயே பந்தல் அமைத்து அசைவ விருந்து தயாரிக்கப்பட்டது. அப்போது சமையல் செய்து பந்தி பரிமாறுவதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார் சத்தம் போட்டனர். அவர்களை பொன் பெருமாள் சமாதானம் செய்தார். அப்போது அவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த சவரிமுத்து மகன் சந்தியாகுராஜ் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பயங்கர மோதல்
பின்னர் சிறிது நேரத்தில் திருமண வீட்டில் விருந்து பரிமாறப்பட்டது. சந்தியாகுராஜ், நண்பர் இசக்கிமுத்துவுடன் பந்தியில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு பொன்பெருமாள், அவருடைய மகன் முத்தார், உறவினர்களான குறிப்பன்குளம் முத்துக்குமார் மகன் அருண், குப்பாபுரம் தங்கவேல் மகன் இசக்கிமுத்து, பொட்டல்நகர் சுடலைமுத்து மகன் தங்கராஜ் ஆகிய 5 பேரும் சாப்பிட சென்றனர்.
அப்போது பொன்பெருமாள் தரப்பினருக்கும், சந்தியாகுராஜ் தரப்பினருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு கோஷ்டி மோதலானது. ஆத்திரமடைந்த பொன்பெருமாள் தரப்பினர், சந்தியாகுராஜ் நண்பர் இசக்கிமுத்துவை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை உடனே நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
11 பேர் மீது வழக்கு
இதற்கிடையே, பொன்பெருமாள் திருமண வீட்டில் விருந்து சாப்பிட்டு விட்டு, அங்குள்ள தனது வீட்டிற்கு சென்றார். அப்போது சந்தியாகுராஜ், அவருடைய சகோதரர்கள் பண்டாரம், இருதயம், மைக்கேல், பாக்கியம், ஆரோக்கியம் மகன் இசக்கிமுத்து ஆகிய 6 பேரும் பொன் பெருமாள் வீட்டிற்கு சென்று, அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த பொன்பெருமாள் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து இருதரப்பினரும் அளித்த புகாரின்பேரில், சந்தியாகுராஜ், பொன்பெருமாள் உள்ளிட்ட 11 பேர் மீது நாசரேத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் பாதுகாப்பு
நாசரேத் அருகே திருமண வீட்டில் சமையல் தாமதத்தால் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.