சென்னை
மீனம்பாக்கத்தில் கல்லூரி மாணவர்கள் இடையே கோஷ்டி மோதல்; வாலிபரை தாக்கிய 9 பேர் கைது
|மீனம்பாக்கத்தில் கல்லூரியில் மாணவர்களிடையே கோஷ்டி ஏற்பட்டது. இதில் வாலிபரை தாக்கிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவரில் ஒருவரது தந்தை போலீஸ் திட்டியதால் பஸ் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார்.
சென்னையை அடுத்த மீனம்பாக்கத்தில் தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் இடையே கடந்த 20-ந்தேதி கோஷ்டி மோதல் ஏற்பட்டது. மீனம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
இந்த முன்விரோதம் காரணமாக கல்லூரி மாணவர்கள் உள்பட சிலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீனம்பாக்கம் கொளத்து மேடு பகுதியில் இருந்த வாகனங்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் மீனம்பாக்கத்தை சேர்ந்த விஜி என்ற வாலிபரையும் தாக்கினர்.
இதுதொடர்பாக மீனம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆலந்தூர் கண்ணன் காலனியை சேர்ந்த சஞ்சய் (22), மணிகண்டன் (20), அயனாவரம் பகுதியை சேர்ந்த ஜான் (19), ஆயிரம்விளக்கு பகுதியை சேர்ந்த அஜய் (19), கோடம்பாக்கத்தை சேர்ந்த அன்பு செல்வன் (19) உள்பட 9 பேரை கைது செய்தனர்.
இதில் கைதான சஞ்சய் என்பவருடைய தந்தை குமார், தன்னுடைய மகனை விடுவிக்குமாறு கூறி போலீஸ் நிலையம் வந்து முறையிட்டதாக கூறப்படுகிறது. அப்போது மீனம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இருந்த போலீசார், குமாரை திட்டியதாக கூறப்படுகிறது.
இதில் மனமுடைந்த குமார், மீனம்பாக்கம் போலீஸ் நிலையம் எதிரே வந்த மாநகர பஸ் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது பஸ்சின் பக்கவாட்டில் மோதி கீழே விழுந்ததில் காலில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.