கன்னியாகுமரி
ராக்கெட்டில் கோளாறு ஏற்பட்டால் மனிதர்கள் தப்பிக்க வசதி
|இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில் ராக்கெட்டில் கோளாறு ஏற்பட்டால் அதில் இருக்கும் மனிதர்கள் தப்பிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று விஞ்ஞானி நாராயணன் ெதரிவித்தார்.
திருவனந்தபுரம் இஸ்ரோ எல்.பி.எஸ்.சி. (லிக்யுட் புரப்பல்சன் சிஸ்டம் சென்டர்) மைய இயக்குனரும், சந்திரயான்-3 விண்கல திட்டத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவருமான குமரி மாவட்டத்தைச் சேர்ந்த விஞ்ஞானி நாராயணன் தினத்தந்தி நிருபருக்கு அளித்த சிறப்பு பேட்டியின் போது கூறியதாவது:-
விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியர்களை 400 கி.மீ. உயரத்துக்கு விண்வெளிக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக திரும்ப அழைத்து வருவது தான் ககன்யான் திட்டம். அதற்கு 4 வகையான திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது. அதில் ஒன்று மனிதர்களை விண்ணுக்கு கொண்டு செல்லக்கூடிய ராக்கெட். எல்.வி.எம்.-3 ராக்கெட் வடிவில் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. ராக்கெட் உருவாக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
2-வது ஆட்களை கொண்டு செல்லக்கூடிய ஆர்பிட்டர் மாடியுலில், க்ரு மாடியுல் என்ற இரண்டு பிரிவுகள் இருக்கும். இவற்றில் தான் மனிதர்களை பாதுகாப்பாக அமர செய்து கொண்டு செல்லவும், திரும்ப கொண்டு வரவும் முடியும். இந்த ஆர்பிட்டர் மாடியுலில் புதிய தொழில்நுட்பத்தில் இது உருவாக்கப்படுகிறது. இதில் மனிதர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அதாவது ஆக்சிஜன் அளவு, பூமியில் உள்ளதைப் போன்ற தட்ப-வெப்பநிலையை சரிப்படுத்த வேண்டும். கார்பன்-டை-ஆக்சைைட கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இதுபோன்ற சூழ்நிலைகளை ஏற்படுத்தினால் தான் விண்ணுக்கு செல்லும் மனிதர்கள் பாதுகாப்பாக பயணிக்க முடியும். அதற்கான பணிகள் தான் தற்போது நடந்து வருகிறது.
3-வதாக விண்ணுக்கு மனிதர்களை கொண்டு செல்லும் ராக்கெட்டில் ஏதாவது கோளாறு, அசம்பாவித சம்பவம் நிகழ்ந்தால், அதில் உள்ள மனிதர்களை பாதுகாப்பாக தரையிறங்கச் செய்ய வேண்டும். அதற்காக இந்த ராக்கெட்டில், சிறு ராக்கெட் போன்று பொருத்தப்படக்கூடியது தான் க்ரூ எஸ்கேப் சிஸ்டம் ஆகும். பிரச்சினையின் போது க்ரு எஸ்கேப் சிஸ்டத்தில் பொருத்தப்பட்டுள்ள சிறு ராக்கெட் போன்ற அமைப்பு பெரிய ராக்கெட்டில் இருந்து தனியாக பிரிந்து, அதில் உள்ள பாராசூட்கள் மூலம் பூமியிலோ அல்லது கடலிலோ பாதுகாப்பாக வந்து தரையிறங்கும்.
இது எவ்வாறு செயல்படுகிறது? என்பதற்கான பரிசோதனை 21-ந் தேதி (அதாவது நாளை) ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ மையத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக டெஸ்ட் வெகிக்கிஸ் என்று சொல்லக்கூடிய புதிய ராக்கெட் ஒன்றை உருவாக்கியுள்ளோம். அந்த ராக்கெட்டின் மேல்பகுதியில் க்ரு மாடியுலை பொருத்த இருக்கிறோம். அதற்கு மேல் க்ரு எஸ்கேப் சிஸ்டத்தையும் பொருத்தி, ராக்கெட்டை சுமார் 12 கி.மீ. தூரம் கொண்டு செல்வோம். அவ்வாறு ராக்கெட் மேலே செல்லும்போது அதில் ஏதாவது ஒரு கோளாறை ஏற்படுத்தி, க்ரு எஸ்கேப் சிஸ்டத்தில் உள்ள மோட்டாரை இயக்கி தனியாக பிரிந்து போகச் செய்வோம். அது மேலும் 5 கி.மீ. தூரம் மேலே சென்று அதாவது 17 கி.மீ. தூரம் சென்று க்ரு மாடியுல் சிஸ்டமும், க்ரு எஸ்கேப் சிஸ்டமும் தனித்தனியாக பிரிந்துவிடும். அதன்பிறகு க்ரு எஸ்கேப் சிஸ்டத்தில் உள்ள 10 பாராசூட்கள் மூலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள கடலுக்குள் இறங்குவது போன்ற பரிசோதனை நடக்கிறது.
அதற்கான ராக்கெட்டை திருவனந்தபுரம் இஸ்ரோ எல்.பி.எஸ்.சி.யும், நெல்லை மாவட்டம் பணகுடி அருகில் உள்ள மகேந்திரகிரி இஸ்ரோ ஐ.பி.ஆர்.சி.யும் (இஸ்ரோ புரப்பல்சன் காம்ப்ளக்ஸ்) இணைந்து உருவாக்கியுள்ளன. அந்த ராக்கெட்டில் தான் பரிசோதனை நடைபெற உள்ளது. க்ரு மாடியுல், க்ரு எஸ்கேப் சிஸ்டம் போன்றவற்றை திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெணி மையமும் (வி.எஸ்.எஸ்.சி.), பெங்களூருவில் உள்ள ஹியூமன் விண்வெளி மையமும் சேர்ந்து செய்துள்ளன. எனவே ககன்யான் திட்டத்தைப் பொறுத்தவரையில் இது கூட்டு முயற்சியாகும்.
ககன்யான் திட்டத்தில் திருவனந்தபுரம் மையத்தின் பங்கு முக்கியமானது. இதில் ராக்கெட்டின் இரண்டு கட்டங்களை நாங்கள் கொடுக்கிறோம். அதாவது ராக்கெட்டில் எல்-110 திரவ உந்துவிசை கட்டத்தையும், சி-32 என்று அழைக்கக்கூடிய இறுதிக்கட்ட கிரையோஜெனிக் நிலையையும் திருவனந்தபுரம் எல்.பி.எஸ்.சி.யும். மகேந்திரகிரி ஐ.பி.ஆர்.சி.யும் இணைந்து உருவாக்கியிருக்கிறோம். இதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியிருப்பது திருவனந்தபுரம் எல்.பி.எஸ்.சி., அதனை பரிசோதனை செய்தது மகேந்திரகிரி ஐ.பி.ஆர்.சி. ஆகும்.
விண்ணுக்கு ஆட்களை கொண்டு செல்லக்கூடிய ஆர்பிட் மாடியுலில் உள்ள சர்வீஸ் மாடியுல், க்ரு மாடியுல் ஆகிய இரண்டு பகுதியில் உள்ள உந்துவிசை எந்திரத்தையும் நாங்கள் தான் (திருவனந்தபுரம் எல்.பி.எஸ்.சி.) தயாரிக்கிறோம். விண்ணில் மனிதர்கள் சுற்றி விட்டு பூமிக்கு திரும்பும்போது சர்வீஸ் மாடியுல் தனியாக பிரிந்து விடும். க்ரு மாடியுல் மட்டும் தான் தரை இறங்கும். இதுதவிர ராக்கெட்டில் மனிதர்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக கேபின் பிரஷர் கண்ட்ரோல் (அழுத்த கட்டுப்பாட்டு) கருவி, ராக்கெட்டில் தட்பவெப்ப நிலை சீராக இருப்பதற்கான காம்போனன்ட்ஸ்கள், ககன்யான் ராக்கெட்டின் வேகம், பராமரிப்பு, வெப்பநிலை ஆகியவற்றை கண்காணிப்பதற்கான சென்சார்களையும் வழங்குகிறோம். அதனால் திருவனந்தபுரம் எல்.பி.எஸ்.சி.க்கு ககன்யான் திட்டத்தில் பெரும் பங்கு இருக்கிறது.
விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் வருகிற 2025-ம் ஆண்டில் செயல்படுத்த திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம். அதற்கு முன்பு 3 முறை ககன்யான் திட்ட ராக்கெட்டை வைத்து பரிசோதனை செய்ய இருக்கிறோம். ஆட்கள் இல்லாமல் தான் இந்த பரிசோதனை நடத்த உள்ளோம். அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ராக்கெட்டை அனுப்பி முதல்கட்ட பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
அதன் பிறகு ஆட்களை கொண்டு செல்லக்கூடிய 2 ராக்கெட்டுகள் ஆட்கள் இல்லாமல் பரிசோதனை செய்யப்படும். இந்த பரிசோதனை எல்லாம் சரியாக இருந்தால் 2025-ல் ஆட்களை அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.