சிவகங்கை
வேகமாக பரவி வரும் கண்நோய்
|எஸ்.புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கண் நோய் பரவி வருகின்றது. எனவே கண்களை சுத்தமாக வைத்துக்கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கண் நோய் பரவி வருகின்றது. எனவே கண்களை சுத்தமாக வைத்துக்கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
கண் நோய்
எஸ்.புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான புழுதிபட்டி, நாகமங்கலம், செட்டிகுறிச்சி ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கண் நோய் வேகமாக பரவி வருகின்றது. இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்களில் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் என பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மேலும் கண்களில் வெள்ளை படலம் சிவப்பு மற்றும் இளம் சிவப்பு நிறத்தில் மாறி விடுகின்றது.
இதுகுறித்து டாக்டர்கள் கூறும்போது:- ஒருவித வைரஸ் மூலமாக 'மெட்ராஸ் ஐ' எனப்படும் இந்த கண் நோய் வேகமாக பரவி வருகின்றது. இதனால் கண்கள் சிவப்பு நிறமாக மாறுகிறது, மேலும் கண் எரிச்சல், நீர்வடிதல், அழுக்கு தேங்குதல் போன்றவை இதன் அறிகுறிகளாக உள்ளன. இந்த நோய் பாதிப்பால் யாரும் பயப்பட வேண்டாம்.
டாக்டர்கள் ஆலோசனை
வழக்கமாக இந்த வைரஸ் கோடை காலத்தில் பரவும், தற்போது மழைக் காலங்களிலும் பரவி வருகின்றது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகள், வேலை செய்யும் இடம் என நம்முடன் இருப்பவர்களிடம் இருந்து பரவுகிறது. இதற்கு மருந்து கொடுத்தாலும் உடனடியாக முழு பயனை பெற முடியாது. 3 அல்லது 4 நாட்களில் சரியாகி விடும். அதன் பிறகும் பாதிப்பு இருந்தால் கண் டாக்டரை பார்த்து பரிசோதனை செய்து கொள்ளலாம்.
டாக்டரின் ஆலோசனை இல்லாமல் தாங்களாகவே மருந்து, மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தக்கூடாது. பொதுமக்கள் கண்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கண் நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தள்ளி நிற்க வேண்டும். கண்களை துடைக்கும்போது சுத்தமான துணிகளை பயன்படுத்த வேண்டும். வேறொருவர் பயன்படுத்திய துணிகளை பயன்படுத்த கூடாது என கூறினர்.