ரியல் எஸ்டேட் அதிபரைக் கடத்தி ரூ.69 லட்சம் பணம் பறிப்பு - சென்னை அருகே பரபரப்பு
|திருப்போரூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபரைக் கடத்தி 69 லட்சம் பணம் பறித்த சென்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்போரூர்,
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் பொறியாளர் மோகன் ராஜிடம் பண வரவு அதிகம் இருப்பதை நோட்டமிட்ட நில புரோக்கர்களான சுரேஷ், பழனிகுமார் ஆகியோர் மோகன்ராஜுடன் நட்பாக பழகி வந்துள்ளனர். தொடர்ந்து நிலம் காண்பிப்பதாக சுரேஷ் கூறியதை நம்பி வந்த மோகன் ராஜை, காரில் வந்த சுரேஷ் உட்பட 10 பேர் கொண்ட கும்பல், தையூர் கோமான் நகர் செல்லும் சாலையில் அழைத்துச் சென்று, அங்கு ஒரு இடத்தைக் காட்டியுள்ளனர்.
கீழே இறங்கிய மோகன் ராஜின் கழுத்தில் கத்தியையும் தலையில் துப்பாக்கியையும் வைத்து மிரட்டி, மோகன்ராஜின் மனைவிக்கு அலைபேசி மூலம் தொடர்பு கொள்ள வைத்து, நிலம் வாங்குவதற்காக பணம் வேண்டும் என்று பொய் சொல்லி 69 லட்சம் ரூபாய் எடுத்து வரக் கூறியுள்ளார். மோகன் ராஜ் மனைவியிடம் பணத்தைப் பெற்றுக் கொண்ட கும்பல், சிறிது நேரத்தில் மோகன்ராஜை கூடுவாஞ்சேரியில் இறக்கி விட்டுள்ளனர். மோகன்ராஜை மீட்ட அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தனிப்படை அமைத்து தேடிய போலீசார் செல்போன் சிக்னலை வைத்து சுரேஷ், மணி, சீனிவாசன், பாலா, அப்பு, பழனிகுமார் ஆகிய 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பொம்மை துப்பாக்கி, கத்தி, 5 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பணம், கார் மற்றும் 220 சிசி பைக் ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மன்னா என்ற குற்றவாளி சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜரான நிலையில், இதில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.