காதலிக்க மறுத்த வாலிபரை சேர்த்து வைப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.10 லட்சம் பறிப்பு
|காதலிக்க மறுத்த திருமணமான வாலிபரை சேர்த்து வைப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.10 லட்சம் பறித்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கோவை,
கோவை கவுண்டம்பாளையம் டி.வி.எஸ். நகரைச் சேர்ந்த குணசேகரன் என்பவரின் மகள் ராகவி (29 வயது). இவர் கடந்த 2022-ம் ஆண்டு தீபன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தனர்.
தனியாக வாழ்ந்து வந்த ராகவி அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (33 வயது) என்பவரை ஒருதலையாக காதலித்ததாக தெரிகிறது. பாலமுருகனுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இதனால் அவர் ராகவியின் காதலை ஏற்க மறுத்ததுடன், அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்தார்.
இதனால் மனமுடைந்த ராகவி, பாலமுருகனை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு தனக்கு தெரிந்த கார்த்திக், ஆறுமுகம், சதீஷ் என்பவர்களிடம் கூறியுள்ளார். இதனை பயன்படுத்திக்கொண்ட அவர்கள் பாலமுருகனை சேர்த்து வைக்கவேண்டும் என்றால் ரூ.20 லட்சம் வரை செலவாகும் என்று தெரிவித்துள்ளனர். அப்போது அவர் ரூ.10 லட்சம் தருவதாக ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.
சம்பவத்தன்று ராகவி பணத்துடன் சேரன்நகர் பஸ் நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த கார்த்திக், ஆறுமுகம், சதீஷ் ஆகியோர் பாலமுருகனை சேர்த்து வைப்பதாக மேட்டுப்பாளையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் அவர்கள் பணத்தை முதலில் தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் அவர் பாலமுருகனை தன்னுடன் சேர்த்து வைத்தபிறகு பணத்தை தருவதாக தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் கத்தியை காட்டி மிரட்டி ராகவியிடம் இருந்த ரூ.10 லட்சத்தை பறித்துக்கொண்டு, அவரை காரில் இருந்து இறக்கிவிட்டு தப்பிச்சென்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ராகவி இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி கார்த்திக், ஆறுமுகம், சதீஷ் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.