< Back
மாநில செய்திகள்
உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை ஏமாற்றி ரூ.10 கோடி சொத்து அபகரிப்பு - கட்டுமான அதிபர் உள்பட 2 பேர் கைது
சென்னை
மாநில செய்திகள்

உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை ஏமாற்றி ரூ.10 கோடி சொத்து அபகரிப்பு - கட்டுமான அதிபர் உள்பட 2 பேர் கைது

தினத்தந்தி
|
9 July 2023 12:53 PM IST

உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை ஏமாற்றி ரூ.10 கோடி மதிப்பிலான சொத்தை அபகரித்த வழக்கில் கட்டுமான அதிபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் பிரேமா என்ற பெண்ணின் பெயரில் 5,300 சதுரடி இடம் இருந்தது. இதில் அவர் வீடு கட்டி குடியிருந்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரேமா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 48) என்பவர் அவருக்கு சில உதவிகளை செய்து வந்தார். பின்னர் அவரும், சாந்தோம் பகுதியை சேர்ந்த லட்சுமி பில்டர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் இளங்கோ (56) என்பவரும் சேர்ந்து பிரேமா பெயரில் இருந்த சொத்தை தங்கள் பெயருக்கு மாற்றி கொண்டனர். அபகரிக்கப்பட்ட இடத்தில் இளங்கோ தனது கட்டுமான நிறுவனம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டினார்.

இந்த நில மோசடி குறித்து பிரேமாவின் உறவினர் நாகப்பட்டினத்தை சேர்ந்த ராஜராஜன், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்திருந்தார்.

அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து உதவி கமிஷனர் அனந்தராமன், இன்ஸ்பெக்டர் பிரபா ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணையில் இந்த மோசடி உறுதியானது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அபகரிக்கப்பட்ட சொத்தின் தற்போதைய மதிப்பு ரூ.10 கோடி என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்