சென்னை
தாம்பரம் அருகே ஓடும் மின்சார ரெயிலில் மாற்றுத்திறனாளியை மிரட்டி 'கூகுள் பே' மூலம் பணம் பறிப்பு
|தாம்பரம் அருகே ஓடும் மின்சார ரெயிலில் மாற்றுத்திறனாளியை மிரட்டி ‘கூகுள் பே’ மூலம் பணம் பறித்த சம்பவம் நடந்துள்ளது.
தாம்பரம்,
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 40). மாற்றுத்திறனாளியான இவர், நேற்று முன்தினம் காலில் சிகிச்சை பெறுவதற்காக சென்னை ஒமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு மீண்டும் பூங்கா ரெயில் நிலையத்தில் இருந்து மின்சார ரெயிலில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
தாம்பரம் சானட்டோரியம் ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயில் சென்றபோது, அந்த பெட்டியில் இருந்த 4 மர்ம நபர்கள் திடீரென ஜீவானந்தத்திடம் கத்திமுனையில் பணம் கேட்டு மிரட்டினர். அவர் பணம் இல்லை என்று கூறியதால் 'கூகுள் பே' மூலம் ரூ.1,400 பெற்றனர். பின்னர் தாம்பரம் ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயில் மெதுவாக சென்றபோது மர்மநபர்கள் 4 பேரும் ஓடும் ரெயிலில் இருந்து கீழே குதித்து தப்பி சென்றுவிட்டனர்.
ஓடும் மின்சார ரெயிலில் நடந்த இந்த சம்பவம் குறித்து ஜீவானந்தம் அளித்த புகாரின்பேரில் தாம்பரம் ெரயில்வே போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.