< Back
மாநில செய்திகள்
திருப்போரூர் அருகே தொழில் அதிபரிடம் இளம்பெண்ணை பழக வைத்து பணம் பறிப்பு - 4 பேர் கைது
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

திருப்போரூர் அருகே தொழில் அதிபரிடம் இளம்பெண்ணை பழக வைத்து பணம் பறிப்பு - 4 பேர் கைது

தினத்தந்தி
|
1 Feb 2023 9:17 AM GMT

திருப்போரூர் அருகே தொழில் அதிபரிடம் இளம்பெண்ணை பழக வைத்து பணம் பறிக்கப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த கானகோயில்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 40). தொழில் அதிபர். இவர் மறைமலைநகர் அடுத்த மகேந்திரா சிட்டி பகுதியில் பல்வேறு தனியார் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அனுப்பும் தொழில் செய்து வந்தார்.

இந்த நிலையில், இவர் பல்வேறு தொழிலாளர்களின் பி.எப். பணத்தை அவர்களின் கணக்கில் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து, தொழிலாளர்கள் சிலர் அஞ்சூரை சேர்ந்த பிரபாகரன் (32), அம்மணம்பாக்கத்தை சேர்ந்த கன்னியப்பன் (26) ஆகியோரிடம் தெரிவித்தனர்.

இதை அறிந்த இருவரும் பாஸ்கரிடம் பேசி இதை பெரிய பிரச்சினையாக்குவோம் என்று கூறி அவரிடம் பணம் பறித்துள்ளனர். மேலும், இது குறித்து அவர்கள், தங்கள் நண்பரான திருப்போரூர் அடுத்த மேட்டுத்தண்டலம் பகுதியை சேர்ந்த பிரசன்ன பாலாஜி (36) என்பவரிடம் கூறி அவர் பெரிய தொழில் அதிபர் என்றும், அவரிடம் மேலும் பணம் பறிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி உள்ளனர்.

இதையடுத்து பிரசன்ன பாலாஜி வடகடம்பாடியை சேர்ந்த அழகு கலை நிபுணர் ரஞ்சிதா (24) என்பவரிடம் கூறி பாஸ்கரின் செல்போன் எண்ணை கொடுத்து அவரிடம் நட்பாக பழகும்படி கூறி உள்ளனர். அதன்படி, ரஞ்சிதாவும் பாஸ்கரிடம் அடிக்கடி செல்போனில் பேசி பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் உங்களை பார்த்தேன் என்று ஆசை வார்த்தைகளை கூறி பழகத்தொடங்கி உள்ளார். மேலும் இருவரும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பல இடங்களுக்கு ஒன்றாக சென்று உல்லாசமாக இருக்க தொடங்கி உள்ளனர். கடந்த 27-ந்தேதி பாஸ்கரை செல்போனில் அழைத்த ரஞ்சிதா உனக்காக சென்னேரி பகுதியில் காத்திருக்கிறேன். என்னை வந்து அழைத்து செல் என்று கூறி உள்ளார்.

பாஸ்கரும் தனது மோட்டார் சைக்கிளில் அங்கு சென்று ரஞ்சிதாவை அழைத்துகொண்டு சிறுங்குன்றம் வனப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு தனியாக இருவரும் பேசிக்கொண்டிருந்ததாக தெரிகிறது.

அப்போது காரில் வந்த பிரசன்ன பாலாஜி, பிரபாகரன், கன்னியப்பன் ஆகியோர் அங்கு சென்று பாஸ்கரிடம் இருந்த 2 செல்போன்கள், ரூ.28 ஆயிரம் போன்றவற்றை பறித்து கொண்டு தப்பிச்சென்றனர். மேலும், இதை வெளியே சொன்னால் நீ இந்த பெண்ணுடன் இருந்த வீடியோ, போட்டோக்களை வெளியிடுவோம் என்று மிரட்டி விட்டு தப்பிச்சென்றனர்.

இதையடுத்து அங்கிருந்து மீண்டு வந்த பாஸ்கர் இது குறித்து திருப்போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் பாஸ்கரின் செல்போன் எண்ணை சோதனை செய்தனர்.

இதில் ஏற்கனவே ரஞ்சிதாவுடன் பாஸ்கர் தொடர்பில் இருந்ததும், கன்னியப்பன் மற்றும் பிரபாகரன் ஆகியோர் செல்போனில் பாஸ்கரிடம் பேசி இருந்ததும் தெரியவந்தது. இதனால், போலீசார் 4 பேரையும் மடக்கி பிடித்து நடத்திய விசாரணையில் பிரசன்ன பாலாஜி கொடுத்த ஆலோசனையின் பேரில் அனைவரும் செயல்பட்டு தொழில் அதிபர் பாஸ்கரிடம் பணம் பறிக்க முயன்றதும் திட்டமிட்ட நேரத்தில் அவரிடம் பணம் இல்லாததால் கூகுள் பே மூலம் ரூ.28 ஆயிரம் மட்டும் வங்கி கணக்குக்கு அனுப்பியதும் தெரியவந்தது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரசன்ன பாலாஜி, ரஞ்சிதா, பிரபாகரன், கன்னியப்பன் ஆகியோரை கைது செய்து திருப்போரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்