< Back
மாநில செய்திகள்
தென் மாவட்டங்களை புரட்டிப்போட்ட கனமழை... தனித்தீவான திருச்செந்தூர்...!
மாநில செய்திகள்

தென் மாவட்டங்களை புரட்டிப்போட்ட கனமழை... தனித்தீவான திருச்செந்தூர்...!

தினத்தந்தி
|
18 Dec 2023 2:10 PM IST

வெளியுலக தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு திருச்செந்தூர் தனித்தீவாக மாறியுள்ளது.

தூத்துக்குடி,

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பேருந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஓர் ஆண்டு முழுவதும் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித்தீர்த்துள்ளது. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

கடந்த 24 மணிநேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 93.2 செ.மீட்டர் அதிகனமழை பெய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக திருச்செந்தூரில் 67.9 செ.மீ மழை பெய்துள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் 61.8 செ.மீ மழை பெய்துள்ளது.

மேலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையேயான சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ரெயில் தண்டவாளங்களின் அடிப்பகுதியும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதால் ரெயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

திருச்செந்தூரில் பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகனங்களை இயக்க முடியாமல் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கி உள்ளனர். மேலும் இணைய சேவை, தொலை தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் வெளியுலக தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு திருச்செந்தூர் தனித்தீவாக மாறியுள்ளது.

மேலும் செய்திகள்