சென்னை
தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்த ஜனவரி 15-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு - மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் தீர்மானம்
|தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்த ஜனவரி 15-ந் தேதி வரை கால அவகசாம் நீட்டிப்பு செய்து சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் பிரியா தலைமை தாங்கினார். துணை மேயர் மு.மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிலைக்குழு தலைவர்கள், மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மாநகராட்சி மன்ற கூட்டத்தை திருக்குறள் வாசித்து மேயர் பிரியா தொடங்கி வைத்தார். பின்னர் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. அதைதொடர்ந்து கேள்வி நேரமும், நேரமில்லா நேரமும் அடுத்தடுத்து எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது மக்கள் பிரச்சினைகள் சார்ந்து கவுன்சிலர்கள் முன்வைத்த கோரிக்கைகளும், அதற்கு மேயர் பிரியா அளித்த பதில்களும் வருமாறு:-
ஜெய்சங்கர் (அ.தி.மு.க.) :- புழல் காந்திநகர் அருகே கட்டப்பட்ட பாலம் 3 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாமல் இருக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் மக்கள் 3 கி.மீ. தூரம் சுற்றி செல்லவேண்டியுள்ளது. பாலம் எப்போது திறக்கப்படும்?
மேயர் பிரியா:- இந்த பணிகள் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் வருகிறது. எனவே மாநகராட்சி தரப்பிலும் உரிய ஆய்வுகள் செய்து துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்படும்.
சாமுவேல் திரவியம் (காங்கிரஸ்):- டெல்லி, மும்பை, கொல்கத்தா மாநகராட்சிகளில் இருப்பது போல அழகான கழிவறைகள் சென்னை மாநகராட்சியிலும் அமைக்கப்பட வேண்டும். இதன்மூலம் சென்னை நகரம் இன்னும் அழகாகும். சுகாதார சீர்கேடும் இருக்காது...
மேயர் பிரியா:- மத்திய அரசின் நிதியுதவியுடன் 347 அதிநவீன கழிவறைகள்(இ-டாய்லெட்கள்) வாங்கப்பட உள்ளன. இதில் 150 இ-டாய்லெட்கள் வாங்கி நிறுவப்பட்டுள்ளன. புதிய திட்டங்கள் முன்னெடுப்பதற்கான சூழ்நிலைகளும் இருக்கின்றன. படிப்படியாக அந்த திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
உமா ஆனந்த் (பா.ஜ.க.) :- அசோக்நகரில் இருந்து வெளியேற்றப்படும் மழைநீர் 134-வது வார்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சூழ்ந்துவிடுவதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகிறார்கள். குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்சினையும் ஏற்பட்டு வருகிறது. நடவடிக்கை எடுக்கப்படுமா?
மேயர் பிரியா:- மழைநீரை ஜாபர்கான்பேட்டை வழியாக பிரச்சினையின்றி வெளியேற்றுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உரிய நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும். கிரண் ஷர்மிலி (வி.சி.க.) நான் சார்ந்திருக்கும் 107-வது வார்டில் அங்கன்வாடி மையங்கள் தரம் உயர்த்தப்படுமா?
மேயர் பிரியா:- வார்டு 107-ல் உள்ள 7 அங்கன்வாடி மையங்களில் 4 மையங்கள் தரம் உயர்த்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி வருகிற அடுத்த ஆண்டு (2023) ஜனவரி மாதம் முடிவடையும். மீதமுள்ள 4 மையங்களும் மார்ச் மாதம் இறுதிக்குள் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கவுன்சிலர்களின் கோரிக்கை இருந்தது. சில கவுன்சிலர்கள் தங்கள் வார்டில் பொது கழிப்பறை, பூங்கா, விளையாட்டு திடல் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, மாநகராட்சிக்கு சொந்தமான நிலம் இருக்கும்பட்சத்தில் அவைகள் கட்டித்தரப்படும் என்று மேயர் பிரியா தெரிவித்தார். மாநகராட்சிக்கு சொந்தமான நிலம் இல்லாத பட்சத்தில் பிற துறைகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
இதுதவிர சாலை பராமரிப்பு, தெருவிளக்கு சீரமைப்பு, மழைநீர் கால்வாய் மூடி சீரமைப்பு, பழைய கட்டிடங்களை புதுப்பித்து தர வேண்டும், குடிநீர் வசதி, குளம் தூர்வாரி தரவேண்டும், சுடுகாட்டை சீரமைத்து தரவேண்டும், மாநகராட்சி பள்ளி மைதானத்தை சீரமைத்து தரவேண்டும் மற்றும் சுற்றுச்சுவர் ஏற்படுத்தி தரவேண்டும், பிறப்பு சான்றிதழ்களில் தமிழ், ஆங்கிலத்தில் நேரம் குறிப்பிடப்பட வேண்டும், சுகாதாரத்துறை பணியாளர்களை அதிகப்படுத்த வேண்டும், மண்டல வாரியாக கால்நடை காப்பகம் ஏற்படுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவுன்சிலர்கள் பேசினார்கள். கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக மேயர் பிரியா பதிலளித்தார்.
பின்னர் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம் வருமாறு:-
* பெருநகர சென்னை மாநகராட்சியில் தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்துவதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 15-ந்தேதி நீட்டிக்கப்படுகிறது. கடந்த 15-ந்தேதியுடன் அவகாசம் முடிந்த நிலையில், இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
* சாலையில் வணிக விற்பனையகம், நிகழ்ச்சிகள் நடத்திட கட்டணம் நிர்ணயம் செய்யும் திட்டம் கொண்டு வரப்படுகிறது.
* மீனம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் புதிய நாய் இனக்கட்டுப்பாடு மையம் அமைக்கப்படுகிறது.
* கொரோனா, டெங்கு, மலேரியா தடுப்பு பணிகளில் பணிபுரிய ஏதுவாக நியமிக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர்களின் ஒப்பந்த காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுகிறது.
* மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் நலமிகு சென்னை மற்றும் நட்புமிகு சென்னை என்ற அடிப்படையில் தனியார் நிகழ்வுகள் நடத்திட அனுமதி வழங்கப்படுகிறது.
* சென்னை மாநகராட்சியின் 10 மண்டலங்களில் 1 லட்சத்து 77 ஆயிரம் தெரு விளக்கு மின் கம்பங்கள் மற்றும் 200 உயர் கோபுர மின் விளக்குகள் இயக்குவதற்கு, பராமரிக்க ஒரு ஆண்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட இருக்கிறார்கள்.
* பெருங்குடி குப்பை கிடங்கு பையோ மைனிங் முறையில் சுத்தப்படுத்தும் போது சுற்றுச்சூழல் பூங்கா, சி.என்.ஜி. பூங்கா ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
* சென்னை மாநகராட்சியில் பருவமழை காரணமாகவும், குடிநீர் குழாய்கள், மின் துறைகளின் மின் கம்பங்கள் மற்றும் மின் பகிர்மான பெட்டிகள், மின்மாற்றிகள் போன்றவை இடமாற்றம் செய்யும் பணி தவிர்க்க முடியாத காரணங்களால் தாமதமானது. இதையடுத்து மழை நீர் வடிகால் பணிகள் முடிக்க முடியாத சூழ்நிலை உள்ள இடங்களில் 2023-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை பணி கால நீட்டிப்புக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
* சென்னையில் டிஜிட்டல் தொழில்நுட்ப தர நிலைகளின் சமீபத்திய போக்குகளுக்கு ஏற்ப இ.ஆர்.பி. 2.0 திட்டம் செயல்படுத்தப்படும்.
* 200 வார்டுகளையும் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத பகுதிகளாக மாற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பெருநகர சென்னை மாநகராட்சி எடுக்கவேண்டும்.
மேற்கண்டவை உள்பட 79 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒரு தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.
'டேப்லெட்' கேட்டு அடம்பிடித்த கவுன்சிலர்கள்
சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் 61-வது வார்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கவுன்சிலர் பாத்திமா அகமது பேசும்போது, "கவுன்சிலர்கள் அனைவருக்கும் 'டேப்லெட்' வழங்கவேண்டும். இதனால் காகித பரிவர்த்தனை குறையும். மேலும் மாநகராட்சி சார்பில் 15 வெளிநாடு மாநகராட்சிகளுடன் 'சகோதரி திட்டம்' என்ற திட்டத்தில் கைகோர்த்திருக்கிறது. இதுதொடர்பான பணிகளுக்கு வெளிநாடுகளுக்கு செல்லும்போது, கவுன்சிலர்களையும் அழைத்து செல்லவேண்டும். எங்களுக்கு மன்றக்கூட்ட சம்பளத்தையும் உயர்த்திட வேண்டும்', என்று கோரிக்கை விடுத்தார். இதையே பல கவுன்சிலர்களும் கேட்டு அடம்பிடித்தனர்.
அதற்கு மேயர் பிரியா பேசும்போது, 'டேப்லெட்டுக்கு உரிய நிதி ஆதாரம் வேண்டும். வெளிநாடு பயணத்துக்காக அனைத்து கவுன்சிலர்களையும் அழைத்து செல்ல முடியாது. பிரதிநிதிகள் என்ற வகையில் ஓரிருவரை தேர்வு செய்யலாம்', என்றார்.