ஆம்னி பேருந்துகளுக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் - டி.டி.வி. தினகரன்
|ஆம்னி பேருந்துகளுக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை 3 மாத காலத்திற்கு நீட்டிக்க வேண்டும் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
வெளிமாநில பதிவெண் கொண்டு தமிழகத்தில் இயங்கும் நூற்றுக்கணக்கான தனியார் ஆம்னி பேருந்துகளை இயக்குவதற்கு தடை விதித்து போக்குவரத்துத்துறை உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, மதுரை உட்பட மாநிலத்தின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு பொதுமக்களுக்கு தேவையான போக்குவரத்து சேவையை வழங்குவதில் அரசுக்கு இணையாக தனியார் ஆம்னி பேருந்துகளும் முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில் போக்குவரத்துத்துறையின் உத்தரவு பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் மறுபதிவு செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவை மதிப்பதாகவும், அதே நேரத்தில் தங்களின் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு கால அவகாசம் வேண்டும் என தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து வெளிமாநில பதிவெண் கொண்ட பேருந்துகளை தமிழகத்தில் மறுபதிவு செய்திட வழங்கப்பட்ட கால அவகாசத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசையும், போக்குவரத்துத்துறையையும் வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.