சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரின் பதவிக்காலம் நீட்டிப்பு
|துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக்காலத்தை 2025- மே மாதம் வரை நீட்டித்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
சேலம்
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவி வகித்து வருபவர் ஜெகநாதன். இவர் மீதும், முன்னாள் பதிவாளர் தங்கவேல் மீதும் ஏராளமான குற்றச்சாட்டுகளை பல்கலைக்கழக பணியாளர்கள் முன் வைத்தனர். குறிப்பாக தனியார் நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் நிதிகளை மோசடி செய்ததாக ஜெகநாதன் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில் கடந்த டிசம்பர் மாதம் 26ம் தேதி கருப்பூர் காவல்துறையினரால் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார். 8 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றத்தால் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனிடையே தொடர்ந்து நிதி முறைகேடு புகார்கள் எழுந்து வந்ததால், ஜெகநாதனை பதவியில் இருந்து நீக்க வேண்டுமென தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், துணை வேந்தர் ஜெகநாதனின் பதவி காலத்தை அடுத்த ஆண்டு மே 19ம் தேதி வரை நீட்டித்து கவர்னர் ரவி உத்தரவிட்டுள்ளார். நாளையுடன் ஜெகநாதனின் பதவிக் காலம் முடிவடைய இருந்த நிலையில், பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.