ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் ஒரு மாதம் கால அவகாசம் நீட்டிப்பு
|அறிக்கை இறுதி செய்து அரசிடம் சமர்பிக்க மேலும் ஒரு மாதம் கால அவகாசம் கேட்டு ஆணையம், தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.
சென்னை,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் 159 பேரிடம் விசாரணை மேற்கொண்டு, அதற்கான அறிக்கை தயாரிக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வந்தது.
இதற்கான விசாரணை முடிந்த பின்பு அறிக்கை தயாரிக்கும் பணிக்காக கடந்த 12 நாட்களாக ஆணையத்தில் இருந்து நீதிபதி பணியை மேற்கொண்டு வந்தார். இறுதியாக ஆணையம் விசாரணை மேற்கொண்டபோது, எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் காணொலி காட்சி மூலமாக பங்கேற்றனர். அவர்கள் தயாரித்த அறிக்கை இன்னும் ஆணையத்திடம் வழங்கப்படவில்லை. 12-வது முறை ஆணையத்துக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் கடந்த 24-ந்தேதியுடன் முடிவடைந்துவிட்டது.
இந்தநிலையில், அறிக்கை இறுதி செய்து அரசிடம் சமர்பிக்க மேலும் ஒரு மாதம் கால அவகாசம் கேட்டு ஆணையம், தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது. இதை அரசு பரிசீலித்து ஆணையத்துக்கு மேலும் ஒரு மாதம் 9 நாட்கள் கால அவகாசம் கொடுத்து, 13-வது முறையாக கால நீட்டிப்பு வழங்கியுள்ளது. இந்த காலத்துக்குள் அறிக்கையை இறுதி செய்து, ஆகஸ்டு 3-ந்தேதி வழங்குவதற்கு அரசு உத்தரவு பிறப்பித்தள்ளது.