புதுக்கோட்டை
தேங்காய் கொப்பரை கொள்முதல் அடுத்த மாதம் வரை நீட்டிப்பு
|விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தேங்காய் கொப்பரை கொள்முதல் அடுத்த மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.
தேங்காய் கொப்பரை
தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை பெறுவதற்கும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது தேங்காய் கொப்பரையின் விலை குறைந்துள்ளதால், தென்னை விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் விலை ஆதரவு திட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் தேங்காய் கொப்பரையை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆலங்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் 550 மெட்ரிக் டன் கொப்பரையும், அறந்தாங்கி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் 550 மெட்ரிக் டன் கொப்பரையும் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் வரை நீட்டிப்பு
மத்திய அரசினால் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையான கிலோ ஒன்றுக்கு ரூ.105.90 என்ற விலையில் கொப்பரை கொள்முதல் செய்யப்படும். கொப்பரை கொள்முதல் கடந்த 2-2-2022 முதல் 31-7-2022 வரை நடைமுறையில் இருந்தது. தற்போது விவசாயிகளின் கோரிக்கைக்கு இணங்க அடுத்த மாதம் (அக்டோபர்) 31-ந் தேதி வரை திட்டத்தின் கால அளவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கொள்முதல் நிறுவனம் குறைந்தபட்ச தரத்தினை பரிந்துரைத்துள்ளது. அதன்படி கொப்பரையின் குறைந்தபட்ச தரம், அயல்பொருட்கள் (1 சதவீதம்) பூஞ்சானம் மற்றும் கருமை நிறம் கொண்ட கொப்பரை 10 சதவீதம் (எண்ணிக்கையில்) சுருக்கம் கொண்ட கொப்பரை 10 சதவீதம் (எண்ணிக்கையில்) சில்லுகள், உடைபாடு 10 சதவீதம் (எடையில்) ஈரப்பதம் 6 சதவீதம் கொண்டதாக இருக்க வேண்டும். தமிழ்நாடு தென்னை விவசாயிகள் நலனுக்காக மேற்கொண்டுள்ள இந்த கொப்பரை கொள்முதல் திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட தென்னை விவசாயிகள் அதிகளவில் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.