அ.தி.மு.க.வில் இருந்து நீக்கியது செல்லும்: கீழ் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சசிகலா மேல்முறையீடு
|அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என்ற கீழ் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சசிகலா மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
சென்னை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பதவி வகித்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்துக்குப்பிறகு, அந்தப் பதவிக்கு சசிகலா தேர்வு செய்யப்பட்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூரு சிறைக்கு சென்றநிலையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
மேலும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டனர்.
நிராகரிப்பு
அதை எதிர்த்து சசிகலா சென்னை சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த 4-வது சிவில் கோர்ட்டு நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி, சசிகலாவை நீக்கியது செல்லும் என்று தீர்ப்பு அளித்தார். சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரித்து கடந்த ஏப்ரல் 11-ந் தேதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சசிகலா மேல்முறையீடு செய்தார். அதில், 'அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக பதவி வகித்த என்னை கட்சியில் இருந்து நீக்கியது கட்சி விதிகளுக்கு எதிரானது. இந்த வழக்கில் கீழ் கோர்ட்டு முழுமையாக விசாரணை நடத்தவில்லை. அத்துடன் எனது தரப்பு வாதங்களையும் முழுமையாக கேட்கவில்லை. எனது, வழக்கை நிராகரித்தது தவறு. உரிமையியல் வழக்கை ஆரம்பநிலையிலேயே நிராகரிக்க முடியாது. எனவே கீழ் கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.