< Back
மாநில செய்திகள்
ரூ.3 லட்சம் கடனுக்காக வியாபாரியின் சொத்து அபகரிப்பு
நாமக்கல்
மாநில செய்திகள்

ரூ.3 லட்சம் கடனுக்காக வியாபாரியின் சொத்து அபகரிப்பு

தினத்தந்தி
|
8 Dec 2022 12:21 AM IST

நாமக்கல்லில் கோழித்தீவன மூலப்பொருட்கள் வியாபாரியிடம் ரூ.3 லட்சம் கடனுக்காக சொத்துக்களை அபகரித்தது தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.3 லட்சம் கடன்

நாமக்கல் போதுப்பட்டியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது40). இவர் கோழித்தீவன மூலப்பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 2017-ம் ஆண்டு சின்னமுதலைப்பட்டியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.3 லட்சம் கடன் வாங்கி இருந்தார். அந்த பணத்தை வட்டியுடன் சேர்த்து மாதா, மாதம் கோபிநாத் கொடுத்து உள்ளார்.

இந்த நிலையில், ரூ.2 லட்சம் கடன் பாக்கி இருக்கும் நிலையில், கோபிநாத்திடம் உடனடியாக பணத்தை தரவில்லையென்றால் மாதம் ரூ.2 லட்சம் 'டபுளிங்' வட்டி தரவேண்டும் என கடன் கொடுத்தவர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் ரூ.2 லட்சம் கொடுத்து உள்ளார். மேலும் கோபிநாத்துக்கு சொந்தமான சொத்து பத்திரங்கள், வங்கி காசோலை போன்றவற்றை அந்த நபர் வாங்கி வைத்துக் கொண்டதாக தெரிகிறது.

இதற்கிடையில் வாங்கிய பணத்தை முழுமையாக செலுத்திவிட்டதால், சொத்து பத்திரங்களை திருப்பி தரும்படி கோபிநாத் அந்த நபரிடம் கேட்டு உள்ளார். அப்போது கோபிநாத்தின் சொத்துக்களை மோசடி செய்து அபகரித்து, கடன் கொடுத்தவர் அவரது பெயருக்கு கிரையம் செய்து கொண்டது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதனால் அதிர்ச்சி அடைந்த கோபிநாத், நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இதுபற்றி புகார் செய்தார். அதில், வாங்கிய கடன் ரூ.3 லட்சத்தை வட்டியுடன் திருப்பி செலுத்திய பின்பும், கந்துவட்டி கேட்டு தொடர்ந்து கொடுமை செய்வதாகவும், தனக்கு சொந்தமான நிலத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி இருந்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்