மரம் முறிந்து ரெயில்வே மின்சார கம்பியில் விழுந்ததால், விரைவு ரெயில்கள் தாமதம்
|மழை காரணமாக ஒத்திவாக்கத்தில் மரம் முறிந்து விழுந்ததால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
சென்னை,
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, சென்னை மற்றும் புறநகரில் அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் பரவலாக பலத்த மழை பெய்தது. கிண்டி, வடபழனி, கோயம்பேடு, அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களிலும் மற்றும் வேளச்சேரி, வேப்பேரி, தாம்பரம், போரூர், அடையாறு, துரைப்பாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
இந்த நிலையில், கனமழையால் செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கம் ரெயில் நிலையத்தில், ரெயில்வே மின்சார கம்பி மீது மரம் முறிந்து விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக முத்து நகர், அனந்தபுரி விரைவு ரெயில்கள் உட்பட 4 தென்மாவட்ட ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதையடுத்து தண்டவாளத்தில் விழுந்த மரத்தினை ரெயில்வே ஊழியர்கள் அகற்றினர். இதனை தொடர்ந்து 20 நிமிடம் தாமதமாக ரெயில்கள் புறப்பட்டு சென்றன.